சீராகுமா? வீராணம் ஏரி வாழைக்கொல்லை புதிய மதகு... பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

தினமலர்  தினமலர்
சீராகுமா? வீராணம் ஏரி வாழைக்கொல்லை புதிய மதகு... பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி வாழைக்கொல்லை புதிய மதகு உடைந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்போக்கை கைவிட்டு, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தில், வீராணம் ஏரி மிகப்பெரிய கொள்ளளவு கொண்டுள்ள நிலையில், 47 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் குடிதண்ணீர் கொண்டு செல்கிறது. கடந்த ஜனவரி 9ம் தேதி, வீராணம் ஏரிக்கரை சாலையில் வாழைக்கொல்லை அருகில் புதிய மதகு திடீரென உடைந்து (உள் வாங்கி) தண்ணீர் வெளியேறியது. பகல் நேரத்தில் உடைப்பு ஏற்பட்டதால், தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மண்ணை கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினர். இதனால், கீழ்கரையில் உள்ள 40 கிராமங்கள் சேதமின்றி தப்பின. உடைப்பு ஏற்பட்டதை பார்வையிட்ட, கடலுார் கலெக்டர் அன்புச்செல்வன், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தரமான கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகள் மற்றும் மண்ணை கொட்டி அடைத்துவிட்டு சென்றதோடு சரி; மீண்டும் அதனைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.தற்போது ஏரியில் தண்ணீர் மிகவும் குறைந்து வறண்டுள்ள நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவில்லை.
சீரமைப்பு பணி செய்வதற்கு ஏற்ற தருணத்தில், பொதுப்பணித்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.எதிர்வரும் பருவ மழைகாலங்களில் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில், மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்யப்பட்ட வாழைக்கொல்லை புதிய மதகு மீண்டும் உடையும் அபாய நிலையில் உள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, வாழைக்கொல்லை புதிய மதகு உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேரடி ஆய்வு செய்ய வேண்டும். அங்கு, தரமான கான்கிரீட் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை