இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டம்: விக்ரமசிங்கே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டம்: விக்ரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் மாத்தறை நகரில் நடைபெற்ற 97வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்துக் கொண்டார். அப்போது பேசியதாவது: ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு நிகழ்ந்து 3 மாதங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னமும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை பிடிப்பதால் மட்டும் இவ்வகை தீவிரவாதம் முடிவுக்கு வராது. விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை போன்று ஐஎஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது. இதற்கான புதிய யுத்தி குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இங்கிலாந்தில் கடந்த 2001 முதல் தற்போது 2019ம் ஆண்டு வரை, தீவிரவாத சட்டங்களில் 15 முறை திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுபோன்று இலங்கையிலும் பழைய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். தற்போது இலங்கையில் அமலில் இருக்கும் சட்டம் தீவிரவாதத்தை தடுக்க போதுமானதாக இல்லை. சுங்கம், குடியுரிமை மற்றும் குடியேற்றம், மோட்டார் வாகனம் மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து தீவிரவாதத்தை தடுப்பதற்கான வரைவு மசோதாவை தயாரித்து அதை சட்டமாக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

மூலக்கதை