வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

தினகரன்  தினகரன்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: சந்திரயான்-2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்களும், பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அது சென்றடைந்தது. சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்திய இஸ்ேரா விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “சந்திரயான்-2 திட்டம், புதிய கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும் மற்றும் நமது அறிவு அமைப்புக்களை வளமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது” என்றார்.பிரதமர் நரேந்திரமோடி, தனது அலுவலகத்தில் உள்ள பெரிய திரையில்  சந்திரயான்-2 செலுத்துவதை பார்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து  கொண்டுள்ளார். மேலும் குரல்பதிவு மூலமாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு செய்தியை அனுப்பியுள்ளார். தொடர்ந்து சந்திரயான்-2 தொடர்பாக பல்ேவறு செய்திகளை டிவீட் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது இந்தியர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். சந்திரயான்-2 முயற்சியானது இளைஞர்களை அறிவியல் துறையில் மேலும் ஊக்குவிக்க உதவும். சிறந்த தரமான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் இது வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இது விண்வெளி ெதாழில்நுட்பத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும். இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்த நாடு பெருமையடைகிறது” என்று டிவி ட்டரில் தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் மூலம் இஸ்ரோ விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், “சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ குழுவுக்கு பாராட்டுக்கள். இரவு பகலாக உழைத்து 130 கோடி மக்களை பெருமையடைய செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள், விண்வெளி பொறியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1962ம் ஆண்டு இன்கோஸ்பார் மூலமாக விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வையை நினைவு கூரும் சரியான தருணம் இதுவாகும். இதுவே பின்னாளில் இஸ்ரோ ஆனது ” என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் பாஜ செயல் தலைவர் நட்டா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உள்ளிட்டோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை