சோன்பத்ரா வன்முறை சம்பவம் நாடாளுமன்றத்தில் காங். எம்பிக்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்
சோன்பத்ரா வன்முறை சம்பவம் நாடாளுமன்றத்தில் காங். எம்பிக்கள் போராட்டம்

புதுடெல்லி: சோன்பத்ரா வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நிலத்தகராறில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் சோன்பத்ரா வன்முறை சம்பவம் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தினார்கள். மேலும் பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். பாஜ தலைமையிலான உபி அரசு ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை நடத்துவதாகவும் எம்பிக்கள் குற்றம்சாட்டினார்கள்.

மூலக்கதை