செயல் அறிக்கை வெளியீடு மோடி அரசின் 50 நாள் எப்படி? முதல் 5 ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சிப் பணிகள் வேகம்

தினகரன்  தினகரன்
செயல் அறிக்கை வெளியீடு மோடி அரசின் 50 நாள் எப்படி? முதல் 5 ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சிப் பணிகள் வேகம்

புதுடெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது 50 நாள் ஆட்சியின் செயல்திறன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், முந்தைய 5 ஆண்டைக் காட்டிலும் தற்போது வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மிக விரைவாக நடப்பதாக கூறப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜ, 303 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. கடந்த மே 30ம் தேதி பிரதமராக மோடி 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான ஆட்சியின் 50 நாள் நிறைவையொட்டி, முதல் 50 நாளில் அரசின் செயல்பாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டு பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சமூகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கான பணிகளை தொடங்கி, அதை விரைவான வேகத்தில் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முந்தைய 5 ஆண்டு கால ஆட்சியைக் காட்டிலும் தற்போது வளர்ச்சி, மறுசீரமைப்பு பணிகள், அனைவருக்குமான நீதி மிக வேகமாக நடந்து வருகிறது. மோடி அரசு எடுத்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளால், சமூக நீதி, உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் வேகமான வளர்ச்சிக்கான பாதை வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ஊழல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, 50 நாள் ஆட்சியின் முக்கிய சாதனையாகும்.  உலக அமைப்புகளில் பிரதமர் மோடியின் பங்களிப்பால், உலக அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்டுவதற்கு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் வேகம், அளவுகோல் மற்றும் திறன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, சொன்னபடி நடந்து கொள்கிறது இந்த அரசு. சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளுக்காக ₹100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் அமைக்கப்பட்டு, 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்குள் குடிநீர் சென்றடைவது என்பது பெரிய இலக்காக உள்ளது. பிரதமர் மோடி தனது முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே தைரியமான, வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளார். தனது தேர்தல் வெற்றியை, நாட்டை பாதுகாப்பவர்களுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் செயல்படும் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் முக்கிய மாற்றம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், நக்சல், தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மாநில போலீசாரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு மாதம் 3,000 வழங்கும் பென்சன் திட்டத்திற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். பெண் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒடுக்க போக்சோ சட்டத்தில் தண்டனைகளை கடுமையாக்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மூலக்கதை