ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ரயில்வே பணி

தினகரன்  தினகரன்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ரயில்வே பணி

புதுடெல்லி: ரயில்வேயில் பாதுகாப்பு பணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேயில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையைச் சேர்ந்த 76,563 சி மற்றும் டி பிரிவு அளவிலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது அனுமதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை விட 15 சதவீதம் குறைவாகும்.  இந்நிலையில் ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரயில்வே வளாகங்களை பாதுகாக்கும் பாதுகாவலர் பணிக்காக அரசு பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து ஆட்களை எடுத்துக் கொள்வதற்கு மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதியிட்ட ரயில்வே வாரியத்தின் உத்தரவில், ரயில்வேயில் பாதுகாப்பு பணிக்காக ஆட்களை தேர்வு செய்யும்போது சைனிக் கல்யாண் வாரியம் மூலமாக முன்னாள் ராணுவ வீரர்களையும் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர்கள் பொது மேலாளர்கள் மூலமாக கோடைக்கால கூட்ட நெரிசல், விழாக்காலம் அல்லது தேவைப்படும் நேரங்களில் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை