பக்ரீத்துக்கு லட்சம் வரை விலை போவதால் நூதனம் மே.வங்கத்தில் இருந்து வங்க தேசத்துக்கு ஆற்றில் மிதக்க விட்டு மாடுகள் கடத்தல்: எல்லை பாதுகாப்பு படை அதிரடி வேட்டை

தினகரன்  தினகரன்
பக்ரீத்துக்கு லட்சம் வரை விலை போவதால் நூதனம் மே.வங்கத்தில் இருந்து வங்க தேசத்துக்கு ஆற்றில் மிதக்க விட்டு மாடுகள் கடத்தல்: எல்லை பாதுகாப்பு படை அதிரடி வேட்டை

புதுடெல்லி: பக்ரீத் பண்டிக்கைக்காக மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு ஆறுகள் வழியாக மாடுகள் அதிகளவில் கடத்தப்படுவதை தடுக்க, கூடுதல் வீரர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்த எல்லை பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது. பக்ரீத் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் பலியிடப்படும். வங்கதேத்தில் கால்நடைகள் பற்றாக்குறையாக இருப்பதால், மாடுகளின் விலை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.4 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படும் மாடுகள், கன்றுக் குட்டிகள் போன்றவை வங்கதேசத்துக்கு ஆறுகள் மூலமாக  கடத்தப்படுகின்றன. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே, கங்கை பத்மா உட்பட பல ஆறுகள் ஓடுகின்றன. மாடு கடத்தும் கும்பல்கள், வாழை மரங்களுக்கு இடையே  மாடுகளை கட்டி, இரவு நேரங்களில் ஆற்றில் இறக்கி விடுகின்றன. இதனால், வாழை மரங்களுடன் மூழ்காமல் நீந்திச் செல்லும் இந்த மாடுகள் வங்கதேச எல்லையை அடைந்ததும், அங்கு தயாராக இருக்கும் கடத்தல் கும்பல்கள் அவற்றை மீட்டு, சந்தைகளில் கொள்ளை லாபத்துக்கு விற்கின்றன. வடக்கு 4 பர்கனாஸ் மாவட்ட எல்லைகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாக இந்த கடத்தல் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும்படி எல்லை பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மோட்டார் படகுகள் மூலம் ஆறுகளில் ரோந்து சென்று கால்நடைகளை மீட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,00 பசுக்கள், எருமைகளை அவர்கள் மீட்டுள்ளனர். இதனால் கடத்தல்காரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தாக்கும் சம்பவமும் நடக்கிறது. கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர், எல்லை பாதுகாப்பு படையினர் மீது நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் வீரர் ஒருவரின் கை துண்டானது. பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால், மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க கூடுதல் வீரர்களை பணியில் ஈடுபடுத்த எல்லை பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது. தற்ேபாது இந்த மீட்புப் பணியில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடத்தல்காரர்கள் பீதி அடைந்துள்ளனர்.இரவு நேரத்தில் கண்டுபிடிக்க ‘தெர்மல் இமேஜர்’ கருவிகள்இரவு நேரத்தில் மட்டுமே ஆறுகள் வழியாக மாடுகள் கடத்தப்படுவதால், அவற்றை கண்டுபிடிக்க ‘தெர்மல் இமேஜர்’ எனப்படும் நவீன கருவிகளை எல்லை பாதுகாப்பு படை பயன்படுத்துகிறது. உடலில் இருந்து வெளிப்படும் வெப்பம் மூலம் ஆற்றில் மாடுகள் மிதந்து வருவதையும், கரைகளில் இருட்டில் பதுங்கியுள்ள கடத்தல்காரர்களையும் இந்த கருவிகள் துல்லியமாக அடையாளம் காட்டும். அதை வைத்து மாடுகள் மீட்கப்பட்டு, கடத்தல்கார்கள் கைது செய்யப்படுகின்றனர்.

மூலக்கதை