கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு: இன்று மேட்டூர் வந்தடைகிறது

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு: இன்று மேட்டூர் வந்தடைகிறது

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 10ஆயிரம் கனஅடியாக  அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒகேனக்கல்லுக்கு ெதாடர்ந்து 1000  கனஅடியே நீர் வருகிறது. இந்த தண்ணீர் இன்று மேட்டூர் வந்தடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்  மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளது.  இதனால், அந்த அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும்  கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுபோல், கபினி அணையில்  இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரையிலும்  இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 8,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று காலை நிலவரப்படி  விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா  அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், நேற்று முன்தினம் அதிகாலை  பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.  இதனால், ஒகேனக்கல் காவிரியில்  விநாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 1000 கனஅடியாக அதிகரித்தது.  நேற்று காலை நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே  1000 கனஅடி  என்ற அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த சில  நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் குறைந்தளவே தண்ணீர் கொட்டிய  நிலையில் நீர்  வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி  ஆகிய  பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று  அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம்  விநாடிக்கு 217 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி  233  கனஅடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் நீர்திறப்பு ஆயிரம்  கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் வரத்தை காட்டிலும் நீர்திறப்பு  அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.  நேற்று முன்தினம் 39.59 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 39.28  அடியாக சரிந்தது. நீர்இருப்பு 11.72 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் சரிவில் இருந்து மீள  வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 70  ஆயிரம் கனஅடி வீதமும், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 64,595 கனஅடி வீதமும்  தண்ணீர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை