சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) பணியாற்றும் 8 ஆயிரம் பெண் போலீசாருக்காக சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ₹2.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  பணியில் ஈடுபடும்போது பெண் போலீசார் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து உத்தரப் பிரதேச ஏடிஜிபி.யாக பணியாற்றும் ரேணுகா மிஸ்ரா, சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்தினார். அப்போது இவர், சாஸ்திர சீமா பால் என்ற துணை ராணுவப்படையின் ஐஜி.யாக இருந்தார். பணிக்கு செல்லும் இடங்களில் சானிட்டரி நாப்கின்கள் வாங்குவதிலும், அதை அப்புறப்படுத்துவதிலும், உள்ளாடைகளை உலர வைப்பதிலும் பல சிரமங்களை சந்திப்பதாகவும் பெண் போலீசார் இவரிடம் தெரிவித்தனர்.   இந்த பிரச்னைகளை கடந்த 2016ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பெண் போலீசாருக்கான மாநாட்டில் ரேணுகா மிஸ்ரா அறிக்கையாக சமர்ப்பித்தார். அதன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றும்  8,000 பெண் போலீசார் வசதிக்காக 288 நாப்கின் விநியோக இயந்திரங்கள், பயன்படுத்ய நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் ‘இன்சினிரேட்டர்கள்’, துணிகளை உலர்த்த 783 ஸ்டீல் பிரேம் ஸ்டாண்டுகள் வாங்க ₹2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஒரு நாப்கின் இயந்திரத்தின் விலை ₹2 லட்சத்து 50 ஆயிரம், இன்சினிரேட்டரின் விலை ₹40 ஆயிரம். போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு நாப்கின் இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை.

மூலக்கதை