வழி தவறிய வங்கி தேசியமயம்!

தினமலர்  தினமலர்
வழி தவறிய வங்கி தேசியமயம்!

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, 50 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரதமராக இருந்தபோது, இந்திரா மேற்கொண்ட அந்த நடவடிக்கையால், இன்றுவரை ஏற்பட்டுள்ள பலன்கள் என்ன? பாதிப்புகள் என்னென்ன? இந்த முன்னேற்றங்களை எப்படி புரிந்து கொள்வது?


அன்றைய நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே, வங்கிகளை தேசியமயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார், இந்தியா. மொரார்ஜி தேசாய் உட்பட, பல மூத்த தலைவர்களை ஓரங்கட்டவும், ஒதுக்கி வைக்கவும், அதேநேரம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கவும், இந்த முடிவு அவருக்கு பயன்பட்டதாக வரலாறு சொல்கிறது; உண்மையாக இருக்கலாம்.இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை முதலில் பார்த்துவிடுவோம். நகரத்தில் தொடங்கப்படும் ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் இணையாக, நான்கு கிளைகள் பல்வேறு கிராமங்களில் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


சின்னச் சின்ன கிராமங்களிலும், வங்கிச் சேவைகளும், குறிப்பாக கடன்கள் பெறுவதும், இதனால் அதிகமாயிற்று.குறு, சிறு, விவசாயிகள், பல்வேறு கந்துவட்டிக் கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு, வாழ்க்கையை சீரழிந்த நிலை மாறியது. வங்கிகள் தங்களுக்காகத் தான் சேவையாற்றுகின்றன என்ற நம்பிக்கை, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால், கடந்த, 50 ஆண்டுகளில், ஒவ்வொரு தலைமுறையும் வங்கிகளோடு மிகவும் நெருக்கமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டன.ஒரு கட்டத்தில், அது மிகப்பெரும் வேலை வாய்ப்புக்கான இடமாகவும் மாறியது.


சராசரியாக இளைஞர்கள் வங்கித் தேர்வுகள் எழுதினர். குறிப்பாக, படித்த முதல் தலைமுறைப் பெண்களும் தலித்துகளும், வங்கிப் பணியாளர்கள் ஆனார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்கு கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்கியது பொதுத்துறை வங்கிகள் தான்.பிற்காலத்தில் எப்படி, ஐ.டி., துறை வேலைவாய்ப்புகள், அனைத்து சமயங்களையும், சமுதாயங்களையும், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமப்படுத்தும் மேடையாக மாற்றியதோ, அதேபோன்று, 1970களிலும், 80களிலும் வங்கித் துறை வேலைவாய்ப்புகள் செய்தன. இவையெல்லாம் பொதுத் துறை வங்கிகளால் கிடைத்த சமூக முன்னேற்றங்கள்.


ஆனால், வங்கித் துறை மேம்பட்டதா? மேம்பட்டது, 80களின் இறுதியிலிருந்தே, சர்வதேச வங்கித் துறை நடைமுறைகள் இந்தியாவுக்குள்ளும் வந்தன; கணினிமயமாக்கம் தொடங்கியது; தொழில்நுட்பங்கள் பெருகின. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதுப் புது சேவைகள் தொடங்கின. பங்குச் சந்தையில் பல வங்கிகள் பட்டியலிடப்பட்டன. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பல்சக்கரங்களில் ஒன்றாக, பொதுத் துறை வங்கிகள் கணிக்கப்படத் தொடங்கின. சமூக ரீதியாகவும், சேவைகள் ரீதியாகவும் வளர்ந்த வங்கித் துறை, தற்சார்புடைய துறையாக பரிமளித்ததா?நிச்சயம் இல்லை. நாம் கோட்டைவிட்ட இடம் இதுதான்.


மக்களுக்குச் சேவை செய்வது தான் வங்கிகளின் வேலை என்பதுடன் நிற்காமல், அவை தற்சார்புடையவையாக மாறவேண்டும் என்ற எண்ணம், அன்றைய அரசியல் வாதிகளுக்கும் இல்லை, இன்றைய நிர்வாகிகளுக்கும் இல்லை.உண்மையில், மக்களின் பணத்தை வைத்துக்கொண்டு, நாம் தர்மசத்திரம் தான் நடத்தியிருக்கிறோம். அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்திருக்கிறோம். வங்கிகளை முதுகெலும்பில்லாத ஜீவராசிகளாக, எடுப்பார் கைப்பிள்ளையாகவே மாற்றியிருக்கிறோம்.


ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் ஏதேனும் ஒரு வங்கி செயலற்றுப் போகும். அதைப் பெரிய வங்கியோடு இணைத்துவிடுவது சகஜம். சமீபத்தில் கூட, பேங்க் ஆப் பரோடாவுடன், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டன.நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல், இதுவரை, 2.70 லட்சம் கோடி ரூபாய்களை வங்கிகளுக்குக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும், 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எதற்கு இவ்வளவு பணம் தேவை? தாங்கள் ஈட்டிய தொகையில் வங்கிகளால் நிர்வாகம் செய்ய முடியாதா?தொடர்ச்சியாக ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு அரசாங்கமும் மேற்கொண்ட தண்டச் செலவுகளுக்கு வங்கிகள் தான் முகம் கொடுத்தன.


பல்வேறு அரசாங்கங்கள் அமையும்போதெல்லாம், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்றும் வாக்குக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்?வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது யாருக்குப் பயன்பட்டதோ, இல்லையோ, ஆட்சியாளர்களுக்குப் பயன்பட்டது. வங்கிகளைத் தங்கள் ஏவல் ஆளாகப் பயன்படுத்தினர் அரசியல்வாதிகள்.வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது, அதை எதிர்த்து பேசியவர்களில், இருவரது வாதங்கள் முக்கியமானவை. முதலாமவர், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மினு மசானி நாடாளுமன்றத்தில் பேசினார்.


‘இதனால், அரசாங்க சிவப்பு நாடாவும், திறமையின்மையும் அதிகரிக்கும். அரசியல் தலையீடும், ஊழலும், முறைகேடுகளும் பெருகும். அனைத்து அரசுத் துறைகளும் நஷ்டத்தைச் சந்திப்பதைப் போலவே, இந்த வங்கிகளும் நஷ்டமடையும்’ என்றார் மினு மசானி.அதேசமயம், அப்போது எம்.பி.,யாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், வங்கிகள் தேசியமாவதைப் பற்றி நான்கு வார்த்தைகள் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, ‘அசிங்கமானது, தவறானது, நியாயமற்றது, தேவையற்றது’ என்றார்.வங்கித் துறை தேசியமயமானதில் பல்வேறு நன்மைகளை மேலே குறிப்பிட்டேன். அவை எப்படி இருந்தாலும் நடந்திருக்கப் போகின்றன.


ஆனால், மீனு மசானியும், வாஜ்பாயும், 50 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்பதை யூகித்திருப்பதை நினைத்தால், ஆச்சரியமும், வேதனையும் படாமல் இருக்க முடியவில்லை. ஆர்.வெங்கடேஷ்[email protected]

மூலக்கதை