மாறும் சூழலும் நம் மனநிலையும்

தினமலர்  தினமலர்
மாறும் சூழலும் நம் மனநிலையும்

கவலைப்படும் நேரத்தில், என்ன செய்வது என்று அறியாது தவிப்பது நமது இயல்பு. கவலை, அத்தகைய மனநிலைக்கு நம்மை தள்ளி விடும். அந்த நேரத்தில், நாம் தனிமையில் இருப்பதாலும், நம்முடைய கவலைகள் மேலும் அதிகரிக்கும்.

வெற்றிகளை சந்திக்கும் நேரத்தில், பலரோடு விரும்பி உறவாடும் வழக்கம் கொண்டவர்களும், கவலையில் மூழ்கும் போது, தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது வழக்கம். இதுவும், நம் கவலைகளை மேலும் அதிகரிக்கும்.மாறும் சூழல்களில், நம்முடைய மனநிலையை எப்படி கையாள்கிறோம் என்பதே முதலீட்டு வெற்றி, -தோல்விக்கு முக்கிய காரணம். தற்போதைய சூழலுக்கு ஏற்ப, நம்மை வழி நடத்திச் செல்ல, நம்மை உடனடியாக தயார்படுத்திக் கொள்வோம்.


சூழல்கள் மாறுவது என்பது, பொருளாதாரத்தில் மிகச் சாதாரணமாக நடக்கும். பலருக்கு, சாதக சூழலை சந்திப்பதில் காட்டும் முதலீட்டு ஆர்வம், பாதக சூழலில் காணாமல் போய் விடும். எல்லா சூழல்களையும் சந்திக்கத் தயாராக இருப்பது, அனைத்து முதலீட்டாளர்களின் அடிப்படைத் தேவை.இன்னும் சொல்லப் போனால், பாதக சூழலை, அதிக திடத்தோடும் ஆர்வத்தோடும் சந்திக்கும் முதலீட்டாளர்களே, நாம் சந்தையில் மதிக்கும் வெற்றி பெரும் ஆளுமைகளாக இருக்கிறார்கள்.


ஒரு சாதாரண முதலீட்டாளராக இருப்பவரும், ஆளுமையாக தன்னை உருவாக்கி கொள்ளும் வாய்ப்புகள், சந்தை சரிவை சந்திக்கும்போது மட்டுமே ஏற்படுகின்றன. அத்தகைய வாய்ப்புகளை, நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வழிகளைப் பற்றி, இந்த நேரத்தில் பேசுவோம். இனிவரும் காலங்களில், அத்தகைய வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள நம்மைத் தயார் படுத்திக்கொள்வோம்.பங்குச் சந்தையில், தொடர் சரிவு ஏற்படும் நேரத்தில், அடுத்து என்ன செய்வது என்ற கவலை கூடிக்கொண்டே இருக்கும். அத்தகைய கவலைகளை சந்திக்கும் விதம் மட்டுமே, ஒருவரை முதலீட்டு வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்.


நாம் மற்றவர்களைப் போலவே, சந்தையின் அச்சங்களை, நம் முதலீட்டு முடிவுகளில் பிரதிபலித்தால், நம்மால் வருங்காலத்திற்கு தேவையான எந்த முக்கிய முடிவையும் எடுக்க முடியாது.நிகழ்கால கவலைகளைக் கடந்து, வருங்காலத்தில் அந்த கவலைகளுக்கு எப்படி தீர்வை அடைய முடியும் என்ற தேடலில் இறங்குவதே, இப்போதைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.அந்த குறிக்கோள் நிறைவேறத் தேவையான, எல்லா தேடல்களிலும், முயற்சிகளிலும் இப்போது ஈடுபடுவதே, முதலீட்டாளர்களுக்கு நெடுங்கால நன்மையை ஏற்படுத்தும்.

மூலக்கதை