இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு

தினகரன்  தினகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு

டெல்லி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மூத்த தலைவர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி கடந்த 2012ம் ஆண்டு பொறுப்பேற்றார். 3வது முறையாக இந்த  பதவியில் இருந்து வந்த அவர், தனது உடல் நிலையை காரணம் காட்டி, கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடந்தது. இதில், பொதுச் செயலாளர் பதவிக்கு, மாநிலங்களவை எம்பி.யாக உள்ள டி.ராஜாவின் பெயர் ஒரு மனதாக முன்மொழியப்பட்டது. இந்நிலையில்  கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949 அன்று பிறந்த டி.ராஜா (எ) டேனியல் ராஜா 1994 முதல் அக்கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்தவர் ஆவார். இதையடுத்து, அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால், கட்சி தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை