அஜித்துக்கு எதிராக விக்ராந்த்?

தினமலர்  தினமலர்
அஜித்துக்கு எதிராக விக்ராந்த்?

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி, உயிருடன் இருந்த போது, தன்னுடைய கணவர் போனிக் கபூர் தயாரிக்கும் தமிழ் படம் ஒன்றில், நீங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று, நடிகர் அஜித்திடம் கேட்டுக் கொண்டாராம். அதை ஏற்றுக் கொண்டாராம் நடிகர் அஜித்.

அந்த வகையில், இந்தியில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்ற அமிதாப்பச்சனின் பிங்க் படத்தை தமிழில் தயாரிக்க முடிவெடுத்தார் போனிக் கபூர். இந்தப் படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க வேண்டும் என அவர் விரும்ப, தன்னுடைய மனைவி ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முன் வந்தார் நடிகர் அஜித்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தில், அஜித் கதாநாயகனாக நடிக்க, படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8ல் படம் ரிலீசாகும் என, படக் குழு அறிவித்து விட்டது. ஆக., 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன் கூட்டியே வெளியாகும் நேர் கொண்ட பார்வை படத்துக்கு எதிராக நடிகர் விக்ராந்தின் பக்ரீத் படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தையொட்டு, ஒரு வார காலத்துக்கு முன்பிருந்தே விடுமுறை இருக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி, அந்த காலத்தில் படத்தை வெளியிட இரு தயாரிப்பு நிறுவனங்களும் முடிவெடுத்து விட்டன.

இதனால், நடிகர் அஜித் படத்தை எதிர்த்து, நடிகர் விக்ராந்த் படம் ரிலீசாகிறது. இரு படங்களும் வெற்றியடையுமா என்ற கேள்வி, கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை