விதி மீறல், ராம் கோபால் வர்மாவுக்கு போலீஸ் நன்றி

தினமலர்  தினமலர்
விதி மீறல், ராம் கோபால் வர்மாவுக்கு போலீஸ் நன்றி

ராம்கோபால் வர்மாவின் முன்னாள் உதவியாளரும், முன்னணி இயக்குனருமான பூரி ஜெகன்னாத் இயக்கிய 'ஐஸ்மார்ட் சங்கர்' படத்தைப் பார்க்க பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் டிரிபிள்ஸ் சென்று படம் பார்த்ததை தன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ராம்கோபால் வர்மா.

அதோடு, 'போலீஸ் எங்கே, அவர்களும் தியேட்டரில் படம் பார்க்கிறார்களா' என்று கிண்டலடித்திருந்தார். அவருடைய டுவிட்டர் பதிவை வைத்து தெலங்கானா போலீஸ், ராம்கோபால் வர்மா டிரிபிள்ஸ் சென்ற பைக்கின் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் சென்றதற்கு 100 ரூபாய், டிரிபிள்ஸ் சென்றதற்கு 1200 ரூபாய் என மொத்தமாக 1300 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராம்கோபால் வர்மா பாணியிலேயே அவருக்கு கிண்டலான பதிலையும் கொடுத்துள்ளது காவல் துறை. “போக்குவரத்து விதி மீறியதைப் பற்றிச் சொன்னதற்கு நன்றி. போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்பதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஏன் தியேட்டருக்கு மட்டும். தினமும் இது போன்ற நாடகங்களை, சர்க்கஸ்களை சாலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.

அதையும் ராம்கோபால் வர்மா கிண்டலடித்து பதில் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “போலீஸ் காரு, ஐ லவ் யூ. உங்களது அற்புதமான பணிக்காக, உங்களுக்கு தொடர்ந்து 39 நாட்கள் விடாமல் முத்தமிட விரும்புகிறேன். எனக்கு இரண்டாவது மகள் இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களை எனது மாப்பிள்ளையாக வாருங்கள் என வேண்டுகோள் விடுத்திருப்பேன்,” என்று கூறியிருக்கிறார்.

மூலக்கதை