ஆண்டிராய்டு அடிமை! ஆகின்றனர் பள்ளி மாணவர்கள்:மீட்க உளவியல் நிபுணர் பயிற்சி

தினமலர்  தினமலர்
ஆண்டிராய்டு அடிமை! ஆகின்றனர் பள்ளி மாணவர்கள்:மீட்க உளவியல் நிபுணர் பயிற்சி

கோவை:கோவை பள்ளி மாணவர்கள் மத்தியில், ஆண்டிராய்டு மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. படிப்பில் கவனத்தை சிதறடிக்கும், மொபைல் போன் கலாசாரத்தை ஒழிக்க, மாணவர்களுக்கு, உளவியல் நிபுணர் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் கவனமாக செயல்பட்டால், பல்வேறு சிக்கல்களில் இருந்து, பிள்ளைகளை காப்பாற்றலாம்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம், தேர்வு பயம், பதின் பருவத்தால் ஏற்படும் உடல், மனரீதியான தாக்கங்களுக்கு வழிகாட்டும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2014 முதல், நடமாடும் உளவியல் மையம் செயல்படுகிறது.இம்மையம் சார்பில் சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கில், பதின்பருவ மாணவ மாணவியர் மத்தியில், ஆண்டிராய்டு மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளதாக, உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறினார்.அவர் கூறியதாவது:பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த பொது கவுன்சிலிங்கில், மொபைல் போன் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மாணவர்களைப் போல், ஆண்டிராய்டு பயன்படுத்தும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களில், ஒன்பதாம் வகுப்பு முதலே, மாணவர்கள் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். படிக்க வேண்டும் என்று நினைத்தாலும், போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியவில்லை என சில மாணவர்கள் தெரிவித்தனர்.
பதின்பருவ வயதில் நல்லது கெட்டது தெரியாது. எதையும் எளிதில் நம்பி விடுவர். பின், அதனால் ஏற்படும் ஏமாற்றத்தை தாங்க முடியாமல், தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுவர். முக்கியமாக படிப்பில் கவனம் குறைந்து விடும்.மொபைல் போனுக்கு இது போல் அடிமையாகி இருப்பவர்கள், முதலில் சமூக வலைதளங்கள், வீடியோ கேம்சுக்கு ஒதுக்கும் நேரத்தை, குறைக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் காலண்டரில், மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை குறித்து வைத்து, படிப்படியாக குறைத்தால், அடிமையாவதில் இருந்து விடுபடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நேர்மறை ஆற்றலுக்கு தியானம்2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய மாணவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள், சுறுசுறுப்பு மற்றும் ஆர்வமில்லாமை அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து மாணவர்களுக்கும், 'மைண்ட்புல்நெஸ்' என்ற தியானம் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கட்டுப்படுத்தி தன்னம்பிக்கையை, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, இந்த தியானம் உதவும்.'முதலில் பெற்றோர் மாறணும்'''குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் முன், பெற்றோர் முதலில் மாற வேண்டும். பிள்ளைகள் முன்னிலையில், மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்து, புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளுக்கும், தினசரி செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாசிக்க கற்றுத்தரவேண்டும். 'சாப்பிடும் போது உபயோகிக்க வேண்டாம், துாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உபயோகிக்க வேண்டாம்' என, படிப்படியாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு, இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து விளக்கி, அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து, சொல்லிக்கொடுக்க வேண்டும்,'' என்கிறார் அருள்வடிவு.

மூலக்கதை