சிங்கப்பூரில் ”வாசிப்பு மாதம்”

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சிங்கப்பூரில் ”வாசிப்பு மாதம்”

சிங்கப்பூரில் வருடா வருடம் நடைபெறும்வாசிப்பு மாதம்நிகழ்ச்சி இந்த ஆண்டும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.ஜூன் மாதம் 22 முதல் ஜூலை மாதம் 28 வரை இது கொண்டாடப்படும்இதனை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் அங்கங்கே நடைபெற்று வருகிறது.புத்தக வாசிப்பை அதிகப்படுத்த, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் அரசு ஆண்டில் ஓரு மாதம் புத்தக வாசிப்பு மாதமாக அறிவித்து, எல்லா இடங்களிலும் புத்தக வாசிப்பு இயக்கம் நடத்துகிறது. இதனை ஒட்டி நடந்த ஒரு நிகழ்வு தான் பாட்டு மன்றம். அதனை அழகாக விவரித்துள்ளார் திரு தமீம் அன்சாரி என்பவர்.

ஒரு அழகான மாலை வேளையில், ஒரு குவளைத் தேநீரோடு இசையை ரசித்தும் இலக்கியத்தைச் சுவைத்தும் இருந்தால் வேறு இன்பம் தேவையா?

தேசிய நூலக வாரியமும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து வாசிப்பு மாதத்தின் ஒரு அங்கமாக பாட்டு மன்றம்- இசைப் பயணம் என்ற கருப்பொருளோடு இலக்கியச் சாரலோடும் இன்னிசைத் தூறலோடும் தேசிய நூலக வாரிய தி பாட் ( The Pod) பதினாறாவது தளத்தில் 7 ஜூலை 2019 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஒரு அருமையான நிகழ்ச்சியை அரங்கேற்றியது.

நிகழ்ச்சிக்கு நூருக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக லிஷா அமைப்பின் ஆலோசகர் டாக்டர். உமா ராஜன் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய இளைய இசை கலைஞர்களின் அமைதி உணர்வு மிக்க பாடும் இசைத் திறன் பற்றி பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியை முழுமையாக வழி நடத்தும் வாய்ப்பை அளித்த லிஷா அமைப்புக்கு மனமார்ந்த நன்றி.

பாட்டு மன்றம், இசைப் பயணம் என்ற கருப்பொருள் கொண்டதால், மன்னை முனைவர் ராஜகோபாலன் பயணத்தை பற்றிய உரை நிகழ்த்தி, தான் சிறு வயதில் படித்த ராபின்சன் குரூசோ (Robinson Cursoe) மற்றும் ரோட் நாட் டேக்கன் (Road not taken ) போன்ற எடுத்துக் காட்டுகளில் துவங்கி பின்பு மாட்டு வண்டி பயணம், குதிரை வண்டி பயணம், கூட்ஸ் வண்டி பயணம், பேருந்து பயணம், மகிழுந்து பயணம், கப்பல் பயணம் , விமான பயணம் என்று இலக்கியத்தின் விரைவுச் சாலைகளில் மட்டும் அல்லாது, கடல் மற்றும் ஆகாய மார்கமாகவும் பார்வையாளர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டரில் (உருள் பிறழ் இராட்டினம் ) பயணித்த அனுபவத்தை அளித்தார்.

இவரின் இலக்கிய வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் பரசு கல்யாண் மற்றும் அவரின் இசைக் குழுவினர், வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறது செல்லக் கண்ணு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், கூட்ஸ் வண்டியில ஒரு காதல் வந்துருச்சு, வளையோசை கல கல கலவென, பறந்தாலும் விட மாட்டேன் போன்ற பல பாடல்களை துடிப்புடனும் அந்த அரங்கத்துக்கேற்ற ஒலி ஏற்ற இறக்கங்களோடும் இசைச் சாரலை தாராளாமாக தெளித்து பார்வையாளர்களின் மனதை இனிய மாலை பொழுதில் மயக்கிச் சென்றார்.

நிகழ்ச்சியில் நதி நேசன், பிச்சினிக்காடு இளங்கோவன், மாதங்கி. வி விசயபாரதி இறைமதி போன்ற பல உள்ளூர் கவிஞர்களின் பயணம் தொடர்புடைய கவிதைகளும் ஆசியான் கவிஞர் து மு இக்பால் அவர்களின் கவிதை வாசிக்கப்பட்டதும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

சிறப்பு வருகை தெரிவித்தனர் பிரபல திரைப்பட பாடகர்கள்.

சுர்முகி அவர்கள் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலை தமிழ் தாய் வாழ்த்தாக படி நிகழ்ச்சி துவங்கியது. பாடகர் திரு அனந்து அவர்கள் பயணம் பயணம்,என்ற திரைப் பாடலை பாடி நிகழ்ச்சியின் கருப்பொருளோடு தொடர்புடைய இந்த பாடலோடு நிகழ்ச்சிக்குள் பார்வையாளர்களை அழைத்து சென்றார், இவர் கபாலி படத்தில் தான் பாடிய மாய நதி இன்று மார்பில் வழியுதே என்ற பாடலையும் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இது மட்டுமன்றி லிஷா இலக்கிய மன்ற அமைப்பாளர்கள் இன்னொரு சிறப்பு பாடகரை நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்களை மகிழ்ச்சி மழையில் நனைய வைக்க மேடை ஏற்றினார்கள் . வெங்கலக்குரல் படைத்த கலைமாமணி வீரமணி ராஜு மேடையில் தோன்றி, "ஓடம் நதியினிலே" என்ற பாடலையும், நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்ற பாடலை பாடியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

வீரமணி ராஜு அவர்களின் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடல் பஞ்சு பணியாரத்தின் மேல் பனித்துகள்களை தூவியது (Icing on the cake ) போல் அமைந்தது. திரு கண்ணன் சேஷாத்திரி அவர்களை நன்றி உரை அற்ற அழைத்து நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தது சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது.

ஒரு வார இறுதியை பயனுள்ள வகையில் தமிழ் நெஞ்சங்களோடும் இசையை ரசிக்கும் நல்லுள்ளங்களோடும் பகிர்ந்து கொண்ட அனுபவம் இனிமையானதாக அமைந்தது.

மூலக்கதை