எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்

தினகரன்  தினகரன்
எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது:ஓய்வு முடிவு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் தலையிட முடியாது. டோனி போன்ற அனுபவம் வாய்ந்த தலைசிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். அதே சமயம் அணியின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், இலக்குகள், அதற்கான வியூகங்கள்... போன்றவை தேர்வுக் குழுவினரின் கைகளில் தான் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட முடியாது என்பதை டோனி ஏற்கனவே எங்களுக்கு தெரியப்படுத்திவிட்டார். அடுத்த ஆண்டு உலக கோப்பை டி0 தொடர் நடைபெற உள்ளது. அதற்காக சில வியூகங்களை வகுத்து வருகிறோம். அனைத்து வகை போட்டியிலும் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட்டை தயார் செய்ய வேண்டும் என்பதே இப்போதைய திட்டம். அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். மூன்று வகை போட்டிகளிலும் பன்ட் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரது செயல்பாட்டை கவனித்து, கூடுதல் சுமை இருப்பதாகத் தெரிந்தால் தேவையான நடவடிக்கை எடுப்போம். மாற்று விக்கெட் கீப்பர்களாக சாஹா, கே.எஸ்.பரத் உள்ளனர். அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.நான்கு நாள் போட்டிகளில் பரத் தனது திறமையை நன்கு நிரூபித்துள்ளார். சீனியர் வீரர் காயம் காரணமாக விலக நேரிடும்போது, முழு உடல்தகுதி பெற்றதும் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தான் சாஹாவை டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளோம்.இந்தியா ஏ அணியில் சிறப்பாக செயல்பட்ட குருணல் பாண்டியா, ஷ்ரேயாஸ், மணிஷ் பாண்டே, ராகுல் சாஹர், நவ்தீப் சாய்னிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உலக கோப்பைக்கான அணியில் அம்பாதி ராயுடு சேர்க்கப்படாததில் எந்தவித பாகுபாடும் இல்லை. அணியின் பலம், பலவீனத்தை ஆய்வு செய்து சரியான பேட்டிங் வரிசையை அமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு அது. சம்பந்தப்பட்ட வீரர் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுவாரோ அதே அளவுக்கு இது போன்ற முடிவுகளை எடுக்கும்போது எங்களுக்கும் மனரீதியான பாதிப்பு இருக்கும்.அணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என கேட்கும்போது, ரிஷப் பன்ட்டை தவிர்த்து எங்களுக்கு யாரும் சரியான தேர்வாகத் தெரியவில்லை. அதில் நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம். அதே போல தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு மாற்றாக ஒரு ஓபனர் வேண்டும் என கேட்கப்பட்டபோது மயாங்க் அகர்வாலை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அம்பாதி ராயுடுவை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு தவறானது. தனக்கு பதிலாக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டபோது, ‘உலக கோப்பை போட்டியை பார்க்க முப்பரிமாண (3டி) கண்ணாடிக்கு ஆர்டர் செய்திருக்கிறேன்’ என ராயுடு ட்வீட் செய்தது நன்றாக இருந்தது. உண்மையில் அதை நான் மிகவும் ரசித்தேன். இவ்வாறு எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

மூலக்கதை