கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளி

தினமலர்  தினமலர்
கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளி

கொல்லம் : கேரளாவில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, மேற்காசிய நாடான சவுதிக்கு தப்பி சென்ற குற்றவாளியை, போலீசார் கைது செய்து, இந்தியா கொண்டு வந்தனர்.


கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுனில் குமார், 39. சவுதியில், வேலை செய்தார். இவர், 2017ல் கேரளா வந்தபோது, தன் நண்பரின் உறவினரான, 13 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறப்பு கவனம்

பாதிக்கப்பட்ட சிறுமி, இந்த விஷயத்தை, தன் தோழியிடம் கூறிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், சுனில் குமார், மீண்டும், சவுதிக்கு சென்றுவிட்டார். அவரை, கைது செய்யும் முயற்சியில், கேரள போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், கொல்லம் மாவட்ட, போலீஸ், எஸ்.பி.,யான மெரின் ஜோசப், இந்த வழக்கில், சிறப்பு கவனம் செலுத்தினார். சுனில் குமாரை, கேரளா கொண்டு வர, சர்வதேச போலீசான, 'இன்டர்போல்' உதவியை நாடினார். இதையடுத்து, சுனில் குமாருக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.


தப்ப முடியாது

அவரை, ஆறு மாதங்களுக்கு முன், சவுதி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சவுதி சென்ற, எஸ்.பி., மெரின் ஜோசப், தீவிர முயற்சி எடுத்து, சுனில் குமாரை, கேரளா கொண்டு வந்தார். அவர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, எஸ்.பி., மெரின் ஜோசப், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுனில் குமாரை இந்தியா கொண்டு வருவதற்காக, சவுதி சென்றபோது, அந்நாட்டு வழக்கப்படி, நீள அங்கியும், முகத்தை மறைக்கும் 'பர்தா'வும் அணிந்து கொண்டேன். இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு நாட்டுக்கு செல்லும்போது, அவர்களது வழக்கத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், குற்றவாளிகள், வெளிநாடு சென்றாலும், தப்ப முடியாது என்பது, மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.எஸ்.பி., மெரின் ஜோசப், 29 வயதான, கேரளாவின் இளம் பெண் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை