கர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நாளையாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற இருப்பதால், கோர்ட் உத்தரவு என்ன மாதிரி இருக்கும் என்பதை பொறுத்து நடவடிக்கையில் இறங்க இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கி கொண்டனர்.

இதனால், ஆளும்கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று கடந்த 12ம் தேதி முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.

அதை ஏற்ற சபாநாயகர், தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கினார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி தொடங்கியது. விவாதத்தின்போது இருதரப்பு எம்எல்ஏக்களும் ஆக்ரோஷமாக பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

விவாதம் நீண்டு கொண்டே போனதால், அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனால், பாஜ எம்எல்ஏக்கள் கவர்னர் வஜுபாய் வாலாவிடம் முறையிட்டனர்.

அவர், மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். இதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் பா. ஜ. வினர் விடிய விடிய சட்டப்பேரவைக்குள் தர்ணா நடத்தினர். 2ம் நாளான நேற்றுமுன்தினம் சபை கூடியது.

அப்போது மதியம் 1. 30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு செய்தார்.

பிற்பகல் 3 மணிக்கு, ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படி உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இரண்டாவது கெடுவையும் நிராகரித்த முதல்வர் குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து எனது ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசுகையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்ைக எடுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதில் முதல்வர், தலைமை செயலாளர், சபாநாயகர் ஆகியோரை தான் குறிப்பிட்டுள்ளது.

எனக்கு அந்த உத்தரவு பொருந்தாது. எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது கட்சியின் உரிமை.

அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கோர்ட் உத்தரவு சபாநாயகரின் உரிமையை பறிப்பதாக உள்ளது. இதில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றார்.



பின்னர், மேலும் விரிவான விவாதம் நடக்க வேண்டியிருப்பதால் திங்கட்கிழமை வரை சபையை ஒத்திவைப்பதாக வெள்ளி இரவு 8. 30 மணிக்கு சபாநாயகர் அறிவித்தார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், அடுத்த 48 மணி நேரம் வரை தங்கள் எம். எல். ஏக்களை பாதுகாக்க வேண்டியிருப்பதால் காங்கிரஸ், மஜத, பா. ஜ.

ஆகிய கட்சி நிர்வாகிகள் தங்கள் எம். எல். ஏக்களை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். காங்கிரஸ் எம். எல். ஏக்கள் யஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவண்டா ஓட்டலிலும், மஜத எம். எல். ஏக்கள் நந்திகிரிமலையின் அடிவாரத்தில் உள்ள பிரஸ்டீஜ் ஓட்டலிலும், பா. ஜ.

எம். எல். ஏக்கள் எலங்காவில் உள்ள ரமடா ரிசாட்டிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம். எல். ஏக்கள் 14 பேரில் 7 பேர் இப்போது தான் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகி உள்ளனர். இதில் 4 பேர் காங்கிரஸ், 3 பேர் மஜத கட்சியினர் ஆவர்.

இவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர், மஜதவை சேர்ந்த ஒருவர்  தங்களது ராஜினாமா குறித்து தற்போது யோசிக்கத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளது. எனவே மனம் மாறி தங்கள் கட்சிக்கே போய்விடலாம் என்ற மனநிலைக்கு வந்து உள்ளதாக தெரிகிறது.

இவர்கள் மனம்மாறி விட்டால், குமாரசாமி அரசுக்கு ஆபத்து இருக்காது. இதற்கிடையே அதிருப்தி எம். எல். ஏக்கள் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், கவர்னரின் கடிதம் குறித்து முதல்வர் குமாரசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (திங்கள்) காலை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் சட்டமன்ற கூட்டமும் தொடங்கும்.

உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்க போகிறது என்பதை பொறுத்தே சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என தெரிகிறது.

அதேபோல் கர்நாடகத்தில் அதிகாரப்போட்டி நடக்கிறது என்று கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். எனினும் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் தலையிட முடியாத நிலையில் உள்துறை அமைச்சகம் உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கோர்ட் என்ன மாதிரி உத்தரவுகளை பிறப்பிக்கபோகிறது என்பதை பார்த்த பிறகு நடவடிக்கையில் இறங்குவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாளையாவது நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் மஜத கூட்டணி அரசு, கர்நாடக மாநில பாஜ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கின்றன.

இதனால் கர்நாடகாவில் 10 நாட்களுக்கு மேலாக குழப்பம், அரசியல் பரபரப்பு நீடித்துக்கொண்டிருக்கிறது.

.

மூலக்கதை