தனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்

தினகரன்  தினகரன்
தனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்

லண்டன்: இங்கிலாந்து கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் பிடித்துச் சென்றது. இந்த கப்பலில் பணியாற்றும் 23 ஊழியர்களில் 18 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.  ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற ஈரான் எண்ணெய் கப்பலை இங்கிலாந்து கடற்படையினரும், ஜிப்ரால்டர் போலீசாரும் சமீபத்தில் சிறை பிடித்தனர். இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்து வந்தது. சிரியாவுக்கு எண்ணெய் அனுப்பவில்லை என்பதை நிரூபித்தால், கப்பலை விடுவிப்பதாக இங்கிலாந்து கூறியது.  இந்நிலையில், இங்கிலாந்து  நாட்டு கொடியுடன் சென்ற ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற எண்ணெய் கப்பலை, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் ராணுவம் சிறை பிடித்துள்ளது. இது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘ஸ்டெனா பல்க்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல். இதில், 23 ஊழியர்கள் உள்ளனர். அவர்களி–்ல கேப்டன் உட்பட 18 ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்துக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஸ்டெனா இம்பெரோ சென்று கொண்டிருந்தபோது,  ஈரான் மீன்பிடி கப்பல் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதையடுத்து, இந்த கப்பலை ஈரான் ராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர். ஈரான் எண்ணெய் கப்பலை, இங்கிலாந்து சிறை பிடித்ததற்கு, பதிலடியாக இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளதாக தெரிகிறது.  இது தொடர்பாக கப்பல் நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், ‘மீன்பிடி கப்பல் ஒன்றின் மீது எண்ணெய் கப்பல் மோதிவிட்டது. இதனால், மீன்பிடி கப்பலின் கேப்டன், எண்ணெய் கப்பலின் கேப்டனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடற்படை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை எண்ணெய் கப்பலை நெருங்கின. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அது, திடீரென பாதை மாறி ஈரான் நோக்கி சென்றது. சர்வதேச விதிமுறைகளை எண்ணெய் கப்பல் மீறவில்லை,’ என தெரிவித்துள்ளது.  ஸ்டெனா பல்க் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேனல் கூறுகையில், ‘‘கப்பலில் இந்தியா, ரஷ்யா, லத்வியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த மாலுமிகள் 23 ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். இது தொடர்பாக இங்கிலாந்து,  ஸ்வீடன் அரசுகளுடன் தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம்,’’ என்றார். இந்நிலையில், கப்பலில் உள்ள பிலிப்பைன்ஸ் மாலுமியை விடுவிக்கும்படி ஈரானிடம் பிலிப்பைன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து எச்சரிக்கை:இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹன்ட் கூறுகையில், ‘‘இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்துள்ளது கவலை அளிக்கிறது. ஈரான் அபாயகரமான சட் டவிரோத வழியில் செல்கிறது. இதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால், அது கடுமையாக இருக்கும். எங்கள் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்,’’ என்றார்.

மூலக்கதை