அமர்நாத் யாத்திரை 4 நாட்களில் 6 பக்தர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அமர்நாத் யாத்திரை 4 நாட்களில் 6 பக்தர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையின்போது கடந்த 4 நாட்களில் உடல்நலக் குறைவு  உள்ளிட்ட காரணங்களால் 6 பக்தர்கள் இறந்துள்ளனர். தெற்கு  காஷ்மீரில் உள்ள இமயமலையில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இதில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15 வரை யாத்திரை நடக்கிறது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்  மாவட்டத்தின் பகல்காம், கந்தர்பால் மாவட்டத்தின் பல்தால் மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த 21 நாட்களில் 2.5  லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்நிலையில், உடல்நலக் குறைவு,  விபத்து, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமர்நாத் யாத்திரை  சென்றவர்களில் இதுவரை 2 தன்னார்வலர், 2 பாதுகாப்பு படையினர் மற்றும்  பக்தர்கள் என மொத்தம் 18  பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் உடல் நலக்குறைவினால் 6 பேர் இறந்துள்ளனர், இதனால், யாத்திரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அமர்நாத் குகை கோயில் பகுதியில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதும், இதுபோன்ற உயிரிழப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மூலக்கதை