வேட்டை! மலைப்பகுதியில் போர்வெல் அமைக்க வசூல் . . . சிண்டிகேட் அமைத்து செயல்படும் புரோக்கர்கள்

தினமலர்  தினமலர்
வேட்டை! மலைப்பகுதியில் போர்வெல் அமைக்க வசூல் . . . சிண்டிகேட் அமைத்து செயல்படும் புரோக்கர்கள்

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் 'போர்வெல்' அமைக்க இஷ்டம் போல் பணம் வசூலிக்கும் போக்கு அதிகரித்து உள்ளது.

மலைப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் போர்வெல், மண் அள்ளும் இயந்திரம் பயன்பாடு, பாறை தகர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மலைத்தள பாதுகாப்பு கருதி அப்போதைய கலெக்டர் வள்ளலார் தடை விதித்தார். இதையடுத்து அரசு சார்ந்த பணிகளுக்கு அனுமதி பெற்று இயந்திர பயன்பாடு அனுமதிக்கப்பட்டது.

புரோக்கர்கள் சிண்டிகேட் இருந்தாலும் இதைதடுக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர், சம்பந்தப்பட்டோரிடம் 'கவனிப்பு' பெற்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அப்பணிகள் தாராளமாக நடக்கின்றன. கொடைக்கானல் நகர் பகுதி, தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஆழ்துளை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஆளும் கட்சியினர் மற்றும் புரோக்கர்கள் 'சிண்டிகேட்' அமைத்து செயல்படுகின்றனர். அதிகாரிகளை சமாளிக்க வேண்டும் எனக்கூறி ஆழ்துளை அமைப்போரிடம் தனியாக ரூ. 20 ஆயிரம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது.

வசூல் வேட்டை மேலும் தரைப்பகுதியை காட்டிலும் மலைப்பகுதியில் ஒரு அடிக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் அவசியத்திற்காக, வேறு வழியின்றி இவர்கள் கேட்கும் தொகையை கொடுக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இதில் விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இருந்தாலும் கீழ்மலை, மேல்மலை பகுதியில் சிண்டிகேட் அமைத்து வசூல் கனஜோராக நடக்கிறது.

ஆர்.டி.ஓ., சுரேந்திரன் கூறுகையில், ''ஆழ்துளை அமைக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளைக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மூலக்கதை