ரூ.45 கோடி போதும்! 6 திட்டச்சாலைகள் உருவாகும்

தினமலர்  தினமலர்
ரூ.45 கோடி போதும்! 6 திட்டச்சாலைகள் உருவாகும்

கோவை:கோவை நகர் பகுதியில், ஆறு இடங்களில் திட்டச்சாலை உருவாக்க, உள்ளூர் திட்டக்குழும உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியில் ரூ.45.47 கோடி கேட்டு, கலெக்டருக்கு, மாநகராட்சி கடிதம் எழுதி, ஆறு மாதமாகி விட்டது; இன்னும் நிதி ஒதுக்காததால், அத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது.
கோவையில் நாளுக்கு நாள் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது; பிரதான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், திட்டச்சாலை மற்றும் இணைப்பு சாலை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வார்டுக்கு ஒரு திட்டச்சாலை உருவாக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி தரப்பிலும் சில பகுதிகளில் திட்டச்சாலை உருவாக்க கோப்பு தயாரித்து, நிதி கேட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.சவுரிபாளையயம் ரோடு - மாரியம்மன் கோவில் முதல் மகாலட்சுமி கோவில் வரை அகலப்படுத்துதல் - 8,947.62 சதுரடி, கணபதியில் வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை ரோட்டின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி விஸ்தரிப்பு செய்தல் - 5,242 சதுரடி, சத்தி ரோடு மேற்கு பகுதி - ராஜ வீதியில் இருந்து காமாட்சியம்மன் கோவில் வரை - 7,300.846 சதுரடி.
சத்தி ரோடு கிழபுறம் - மோர் மார்க்கெட் ஆவராம்பாளையம் ரோடு சந்திப்பு - 1,068.50 சதுரடி, பொன்னையராஜபுரத்தில் இருந்து செல்வ சிந்தாமணி குளக்கரை வழியாக வடக்கு ஹவுசிங் யூனிட் வரை - 1,42,824 சதுரடி, மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து நல்லாம்பாளையம் சாலை, சங்கரலிங்கனார் சாலை, பாரதியார் சாலை மற்றும் ரவீந்திரநாத் தாகூர் சாலை வழியாக கணபதி பகுதியில் சத்தியமங்கலம் சாலை இணைப்பு திட்ட சாலைக்கு, 17,056 சதுரடி நிலம் கையகப்படுத்த வேண்டும்.
முந்தைய கலெக்டர் ஹரிஹரன் தலைமையில், அப்போது நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், சாலை அபிவிருத்தி திட்டம் இருந்தால், மூன்று பணிகள் தொடர்பாக கருத்துரு சமர்ப்பிக்க, மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேற்கண்ட ஆறு இடங்களில், திட்டச்சாலை உருவாக்க, 1,82,438.966 சதுரடி நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கு. உள்ளூர் திட்ட குழும உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியில் ரூ.45.47 கோடி பெற்றுத்தர வேண்டுமென, கடந்த ஜன., மாதம் மாநகராட்சியில் இருந்து கலெக்டருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆறு மாதமாகியும் இன்னும் நிதி ஒதுக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கவே, உள்ளூர் திட்டக்குழுமத்தில் கோடிக்கணக்கான ரூபாய் இருப்பு இருக்கிறது. அதை கோவை மாநகர வளர்ச்சிக்கு ஒதுக்க, கலெக்டர் ராஜாமணி முயற்சிக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மூலக்கதை