ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க எகிறும் எதிர்பார்ப்பு!

தினமலர்  தினமலர்
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க எகிறும் எதிர்பார்ப்பு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க இடம் ஒப்படைக்கப்பட்டு, கட்டுமானப்பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் துவங்காமல் தாமதம் ஏற்படுவதால், வக்கீல்களும், பொள்ளாச்சி மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும், சுற்றுப்பகுதியிலும் அதிகரித்து வரும் குற்ற செயல்களால், அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை பாரமரிக்கவும், குற்றச்செயல்களை கட்டுக்குள் கொண்டு வரவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகள், பொள்ளாச்சி கோர்ட்களில் விசாரிக்கப்படுகின்றன. பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், ஜே.எம்.எண்: 1, 2 மாஜிஸ்திரேட் கோர்ட்கள், மாவட்ட உரிமையில் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் செயல்படுகின்றன.சிவில், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியில் கூடுதலாக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
கோர்ட்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என, அரசுக்கும், சென்னை ஐகோர்ட்டுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவை ரோடு, சி.டி.சி.,மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டது. கட்டடம் கட்ட, ஏழு கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கப்பட்டது. கோர்ட் வளாகம் அமையும் இடத்தை, மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, நில அளவுகளை இறுதி செய்து ஐகோர்ட் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்.அதன் பின், கோர்ட் வளாக அமைப்பு திட்டமிடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி கட்ட வரைபடத்தில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் என, 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோர்ட் வளாகத்திலேயே, இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீதிபதிகள் குடியிருப்பு அமைக்கவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, கோர்ட் அனுமதி அளித்து, மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தாமதம் தொடர்வதால், வக்கீல்களும், பொள்ளாச்சி மக்களும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், சட்டசபை கூட்டத்தில், பொள்ளாச்சியில் கூடுதலாக இரண்டு நீதிமன்றங்கள் துவங்குவது குறித்தும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதால், பணிகள் விரைவில் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கூடுதல் மாவட்ட நீதிமன்றம்!பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்க ஐகோர்ட்அனுமதி அளித்துள்ளது.இக்கோர்ட்களை விரைவில் துவக்க, தற்காலிகமாக இடம் தேர்வு நடக்கிறது. ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் திறக்கப்படுவதற்கு முன், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செயல்படவும் அனுமதி பெறப்படும், என, வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை