புதிய கல்வி கொள்கை - குடிமகனாக கேள்வி கேட்கிறேன் : சூர்யா

தினமலர்  தினமலர்
புதிய கல்வி கொள்கை  குடிமகனாக கேள்வி கேட்கிறேன் : சூர்யா

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா, விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி வட்டாரத்தில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்தன. இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு சூர்யா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது : கல்வி என்பது சமூக அறம், சூதாட்டமாக மாறக்கூடாது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

இதுவரை அகரம் பவுண்டேஷன் மூலமாக 3000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அகரம் தன்னார்வலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களின் குடும்ப சூழலையும், கல்வி சூழலையும் அய்வு செய்து பகிரும் அனுபவங்களை கேட்டு கண்கள் கலங்கி போகும்.

அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தகுதியிலும், தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு அகரம் மூலமாக அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவரை கூட மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்வி கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

இன்னமும் மின்சார இல்லாத வீடுகளில் வாழ்ந்து, தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கிற மாணவர்களின் தடைகளையும், வலிகளையும் கள அனுபவம் மூலமாக அறிந்திருக்கிறோம். இத்தகைய மாணவர்களின் எதிர்கால நலனை தீர்மானிக்கிற தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணி கவலையாக இருந்தது. எதிர்காலத்தை தீர்மானிக்கிற கல்வி கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதி செய்யவே கல்வியாளர்களுடன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தோம்.

கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். என் கருத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும், மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவைப் பெறுவோம்.

புதிய கல்விக்கொள்கை பற்றிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இணையதளத்தில் கூறுங்கள். மத்திய அரசும், அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

மூலக்கதை