கல்வித்தரம் இல்லை; வேலைவாய்ப்பு குறைந்தது; 75 பொறியியல் கல்லூரிகள் மூடல்.... ஏஐசிடிஇ வெளியிட்ட தகவலின்படி பலருக்கு வேலையிழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்வித்தரம் இல்லை; வேலைவாய்ப்பு குறைந்தது; 75 பொறியியல் கல்லூரிகள் மூடல்.... ஏஐசிடிஇ வெளியிட்ட தகவலின்படி பலருக்கு வேலையிழப்பு

புதுடெல்லி: கல்வியில் தரமில்லை; வேலைவாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால், நாடு முழுவதும் 75 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டு மூடப்படுவதாக ஏஐசிடிஇ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட கல்லூரிகளில் பணியாற்றிய பலர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) செயல்பட்டு வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் இந்த அமைப்பிற்கான பிராந்திய கமிட்டிகள் உள்ளன.

எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அல்லது புதிய தொழில் படிப்புகளைத் தொடங்க வேண்டுமென்றாலும், இந்த அமைப்பின் அங்கீகாரம்தான் அடிப்படை.

கடந்த 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி, ஏஐசிடிஇ ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாறியது.

அதன்பின், நாட்டினுடைய தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டிற்கான திட்டமிடுதல், விதிமுறைகள் மற்றும் தர மதிப்பீடுகளை உருவாக்கிப் பாதுகாத்தல், அங்கீகாரம், முக்கிய விஷயங்களுக்கு நிதியுதவி அளித்தல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் சமீபத்தில் புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் நடப்பாண்டில் 75 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விரும்பி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன.

இதன்படி உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதேசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மகாராஷ்டிரா 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏஐசிடிஇ தகவலின்படி நாடு முழுவதும் மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளை நடத்த முடியாமல் திணறும் நிர்வாகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வித்தரம், வேலைவாய்ப்பு குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வந்தது.

தமிழகத்தை பொருத்தவரை, 2018-19ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மேலும் சரிந்தது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், மொத்தத்தில் 43 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின.

மேலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 90 ஆயிரம் பொறியியல் பட்டதாரி இடங்கள் சேர்க்கை இல்லாமல் காலியாக இருந்தன.

22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 2019-20ம் கல்வியாண்டிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆன்லைன் பொறியியல் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், 30,000க்கும் அதிகமான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன. பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

அவர்களின் ஆய்வுக்கு பிறகே, பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். தற்போது ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பல கல்லூரிகள் ஏஐசிடிஇ விதிமுறைகளை மீறி வருகின்றன.

மூடப்படும் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் உள்ளிட்ட பலருக்கும் தற்போது வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை