உபி சட்டப்பேரவை வளாகத்தில் குடிப்பதற்கு அரை கிளாஸ் தண்ணீர்

தினகரன்  தினகரன்
உபி சட்டப்பேரவை வளாகத்தில் குடிப்பதற்கு அரை கிளாஸ் தண்ணீர்

லக்னோ: ‘சட்டப்பேரவை வளாகத்தில் குடிநீர் தேவைப்படுவோருக்கு அரை கிளாஸ் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்,’ என உத்தர பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் அதிகளவு குடிதண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்க, தண்ணீர் சிச்கனத்தை கடைப்பிடிக்கும்படி பேரவை தலைவர் ஹரிடே நரேன் தீக்ஷித் உத்தரவிட்டுள்ளார்.  இதன் பேரில், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் பிரதீப் துபே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டப்பேரவை வளாகத்தில் குடிக்க தரப்படும் தண்ணீரில் பாதியை மட்டுமே குடித்து விட்டு மீதி தண்ணீரை ஊழியர்களும், மக்களும் வீணாக்குகின்றனர். இதை தடுக்க, இனிமேல் தண்ணீர் தேவைப்படுவோருக்கு அரை கிளாஸ் தண்ணீர் மட்டுமே தரப்படும். கூடுதலாக தண்ணீர் தேவை என யாராவது விரும்பினால், அவர்களுக்கு மட்டும் அதிகளவு தண்ணீர் வழங்கப்படும். தலைமை செயலக வளாகம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள பிற துறையில் பணியாற்றுவோருக்கு டம்ளரில் பாதியளவு தண்ணீர் மட்டுமே வழங்கப்படும். இந்த உத்தரவை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பின்பற்ற வேண்டும்,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை