குட்டைகள் 'உயிர்' பெறுகின்றன! ஒரு வாரத்தில் துவங்குகிறது தூர் வாரும் பணிகள்

தினமலர்  தினமலர்
குட்டைகள் உயிர் பெறுகின்றன! ஒரு வாரத்தில் துவங்குகிறது தூர் வாரும் பணிகள்

அனுப்பர்பாளையம்:மழைநீர் சேகரிக்கும் வகையில், திருப்பூரில் உள்ள குட்டைகள் துார்வாரப்படுகின்றன. தொண்டு நிறுவனங்கள்உதவியுடன் மாநகராட்சி, இப்பணியை ஒரு வாரத்தில் துவங்க உள்ளன.திருப்பூரில் மழைநீர் சேகரிப்பில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வலியுறுத்தியும், அதன் அவசியத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வருகின்றனர்.
மாநகராட்சி மண்டல பகுதியில் உள்ள பள்ளிகள், வரிவசூல் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய கூடம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் அதிகாரிகள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து வருகின்றனர்.மாநகராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகம், தாய் சேய் நல விடுதி வளாகம் உள்ளிட்டவற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கு தேங்கும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குட்டைகள் அமைந்துள்ளன. இவை, நீரின்றி காய்ந்து வருகின்றன. இவற்றைச் சீரமைத்தால், மழைக்காலங்களில் நீரை சேகரிக்க முடியும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.இதையடுத்து, குட்டைகளை துார்வாருவதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.இதற்காக மாநகராட்சி பகுதியில் உள்ள குட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குட்டையையும் அரிமா, ரோட்டரி, உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு துார்வார முடிவு செய்துள்ளனர்.
ஒரு குட்டைக்கு ஒவ்வொரு தொண்டு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். மாநகராட்சி முதல் மண்டலத்தில், வெங்கமேடு, செட்டிபாளையம் பிரியங்கா நகர், ஓட்டப்பாளையம் ஆகிய 3 இடங்களிலும் அதுபோல், இரண்டாம் மண்டலத்தில், ஜேடர்பாளையம், நெருப்பெரிச்சல், ஜெ.ஜெ. நகர் ஆகிய இடங்களில் குட்டைகள் உள்ளன.
குட்டைகளை தொண்டு நிறுவனங்கள் உதவியோடு ஒரு வாரத்தில் துார்வாரும் பணி தொடங்கும். இதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன.குட்டைகளைத் துார் வாரும்போது, அதற்குரிய நீர் வழித்தடங்களையும் துார்வாருவதோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் நகரில் ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம், சபரி ஓடை ஆகிய முக்கிய ஓடைகள், நொய்யல் ஆற்றுக்கு நீர் கொண்டு வரும் ஆதாரங்களாக உள்ளன. தென்னம்பாளையம் அருகே நுழையும் போது, இதன் அகலம் குறைந்து வருகிறது. இரு கரையும் முட்புதர் மண்டியும், கழிவுகள் கொட்டியும் குறுகலாகி வருகிறது.மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில், மழை நீர் அருகேயுள்ள குடியிருப்புகளில் புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், நீர் நிலையைப் பாதுகாக்கும் வகையிலும், ஓடையில் வரும் நீர் முறையாக செல்லும் வகையிலும், நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் தற்போது தென்னம்பாளையம் பகுதியிலிருந்து ஏறத்தாழ 600 மீ., நீளத்துக்கு ஓடையை துார் வாரி, ஓடையின் இரு கரைகளும் சுத்தம் செய்யும் பணி துவங்கியது.அதன்பின், மியாவாக்கி முறையில், இருபகுதியிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். வரும் ஆடிப் பெருக்கு நாளில் மரக்கன்று நடும் பணி துவங்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணி துவங்கியுள்ளது.

மூலக்கதை