அப்பாடா! 329 தணிக்கை தடைகளுக்கு பாரதியார் பல்கலையில் தீர்வு

தினமலர்  தினமலர்
அப்பாடா! 329 தணிக்கை தடைகளுக்கு பாரதியார் பல்கலையில் தீர்வு

கோவை:பாரதியார் பல்கலையில் கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, 329 தணிக்கை தடைகளுக்கு, கடந்த ஓராண்டில் தீர்வு காணப்பட்டுள்ளது.பல்கலைகளின் வரவு செலவு கணக்குகள், ஆண்டுதோறும் தமிழக அரசின் தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வுகளில் தடை விதிக்கப்படும் செலவினங்கள் சரி செய்யப்பட்டு, அடுத்த கல்வியாண்டு வரவு செலவு கணக்குடன், சமர்ப்பிக்க வேண்டும் என்பது வரையறை.
பாரதியார் பல்கலையின் கீழ் 2017 வரை, 1,113 தணிக்கை தடைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன.இதன் மொத்த மதிப்பு, 99 கோடியே 22 லட்சம் ரூபாய்.இந்நிலையில், கடந்த, ஜூன் 20ம் தேதி நிலவரப்படி, 445 தணிக்கை தடைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு, 53 கோடியே 89 லட்சம் ரூபாய் எனவும், பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பு குழுவின் முயற்சியால், கடந்த ஓராண்டில் மட்டும், 329 தடைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, 45 கோடியே 32 ரூபாய் மதிப்பில், 668 தடைகள் நிலுவையில் உள்ளன. இதில், பெரும்பாலும் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இதற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டியது அவசியம்.'தணிக்கை தடைக்கு விரைவில் தீர்வு'பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ''தணிக்கை தடை அதிகளவில் இருந்ததால், அப்பணிகளை கவனிக்க, ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஒருவரை நியமித்து, தனி கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இதற்கான ஆய்வு பணிகள் நடத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் அதிக தடைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

மூலக்கதை