தற்போது நடக்கும் நாடாளுமன்ற தொடர் ஆக.2 வரை நீட்டிப்பு?: மத்திய அரசு பரிசீலனை

தினகரன்  தினகரன்
தற்போது நடக்கும் நாடாளுமன்ற தொடர் ஆக.2 வரை நீட்டிப்பு?: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி:  தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 2ம் தேதி வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ கடந்த மே மாதம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து 17வது மக்களவை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது. வருகிற 26ம் தேதி கூட்டத் தொடர் முடிகிறது.இந்நிலையில், ‘இந்த கூட்டத்தொடரை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,’ என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை  அதிக நாட்கள் நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை பிரதமர் மோடி ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து ‘பிஆர்எஸ்’ என்ற நாடாளுமன்ற அலுவல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ‘கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், 17வது மக்களவையின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தான் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி உள்ளது. இந்த கூட்டத் தொடரில் கடந்த செவ்வாயன்று வரை அவையின் செயல்பாடு 128 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மக்களவை குறிப்பிட்ட நேரத்தை காட்டிலும் அதிக நேரத்துக்கு இயங்கி உள்ளது. இரண்டு முறை நள்ளிரவு வரை கூட்டத் தொடர் நடத்தப்பட்டு அதன் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு உள்ளன,’ என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை