பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சொர்க்கத்தில் இருந்து குதித்து விடாது: பாஜ மீது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் திடீர் பாய்ச்சல்

தினகரன்  தினகரன்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சொர்க்கத்தில் இருந்து குதித்து விடாது: பாஜ மீது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் திடீர் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘‘இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும் என்பது, நேராக சொர்க்கத்தில் இருந்து வந்து குதித்து விடாது,’’ என மத்திய அரசை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. கடந்த 2012 முதல் 2017 வரையில் ஜனாதிபதியாக பதவி வகித்தார். அதற்கு முன்பு, இந்திரா காந்தியின் அமைச்சரவையில் 1982 -1984 வரை நிதியமைச்சராகவும், அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசில் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களாக இருந்துள்ளார். ஜனாதிபதி ஆவதற்கு முன்பாக, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் நிதியமைச்சராக இருந்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு, அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை இவர் திடீரென கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இந்தியா விரைவில் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்’ என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தனது பட்ஜெட் உரையில் பெருமையுடன் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தான் பிரணாப் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார பலம், 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக விரைவில் உயரும் என்பது நேரடியாக  சொர்க்கத்தில் இருந்து குதித்து விடாது. தற்போது, மத்தியில் அமைந்துள்ள அரசின் சாதனையாக மட்டும் இதை பார்க்க முடியாது. இதற்கு முந்தைய அரசுகளால் போடப்பட்ட பலமான பொருளாதார அடித்தளத்தின் காரணமாகவே இது சாத்தியமாகப் போகிறது.காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள், சுதந்திரத்தின்போது நாடு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்குப் பல பேர் சேவை செய்துள்ளனர். இதற்கு முன்பிருந்த நமது முன்னோடிகள், நன்றாக திட்டமிட்டு நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தனர். ஆனால், இன்று ஆட்சியில் இருப்பவர்கள் காலம் காலமாக இருந்த திட்ட கமிஷனையே கலைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை