மே. வங்க விளம்பரத்த இங்க வைச்சுக்காதீங்க!: திரிணாமுல் எம்பி.க்கு சபாநாயகர் குட்டு

தினகரன்  தினகரன்
மே. வங்க விளம்பரத்த இங்க வைச்சுக்காதீங்க!: திரிணாமுல் எம்பி.க்கு சபாநாயகர் குட்டு

புதுடெல்லி: மக்களவையில் மேற்கு வங்க மாநில அரசின் சுகாதாரத் திட்டத்தை புகழ்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.யை சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக கடிந்து கொண்டார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு அமல்படுத்தியுள்ள சுகாதாரத் திட்டம் குறித்து உயர்வாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ‘`மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விட, மம்தாவின் திட்டம் சிறந்தது,’’ என்றார். அப்போது, அவரை இடைமறித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘`மேற்கு வங்க அரசுக்காக இங்கு விளம்பரம் செய்ய வேண்டாம்,’’ என தெரிவித்தார். அப்போதும் தொடர்ந்து பேசியபடி இருந்த பந்தோபாத்யாய்க்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், ‘‘மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தனித்து அமல்படுத்தியுள்ள சுகாதாரத் திட்டம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டது. எளிதில் பொதுமக்களை சென்று சேராத வகையில் உள்ளது.   இதுவரை ஆயுஷ்மான் திட்டத்தில் சேராத டெல்லி, ஒடிசா, தெலங்கானா மாநில அரசுகள், விரைவில் இந்த திட்டத்தில் சேரும் என நம்புகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை