‘ரிலையன்ஸ் ஜியோ’வுக்கு அதிகரித்த வாடிக்கையாளர்கள்

தினமலர்  தினமலர்
‘ரிலையன்ஸ் ஜியோ’வுக்கு அதிகரித்த வாடிக்கையாளர்கள்

புதுடில்லி: நாட்டில், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட, தொலை தொடர்பு நிறுவனங்களில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனம்.

இதுவரை, அதிக வாடிக்கையாளர்களுடன், முதல் இடத்தில், ‘வீடியோகான் நிறுவனமும், இரண்டாவது இடத்தில், ‘பார்தி ஏர்டெல்’லும், மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் ஜியோவும் இருந்தன. இந்நிலையில், தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனத்தை, மூன்றாவது இடத்திற்கு தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். வீடியோகான் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ மே மாத நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, இது தெரிய வந்துள்ளது. மே மாத இறுதி நிலவரப்படி, ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், 38.76 கோடி வாடிக்கையாளர்களுடன், முதல் இடத்தில் உள்ளது. ஜியோ, 32.30 கோடி வாடிக்கையாளர்களுடன், இரண்டாவது இடத்திலும், பார்தி ஏர்டெல், 32.04 கோடி வாடிக்கையாளர்களுடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடந்த, 2016 செப்டம்பரில், ஜியோ நிறுவனம், குறைவான கட்டண விகிதங்களுடன், சந்தையில் நுழைந்தது. இதன் காரணமாக, மற்ற போட்டி நிறுவனங்கள், கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தன. அவை, ஒன்று, வணிகத்தை மூடிவிட்டு செல்ல வேண்டும் அல்லது பிற நிறுவனத்துடன் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின. சில நிறுவனங்கள் கடையை மூடின. சில நிறுவனங்கள், கூட்டு வைத்துக் கொண்டன.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 30.6 கோடி வாடிக்கையாளர்கள், ஜியோ நிறுவனத்துக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, முதல் காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், 45.6 சதவீதம் அதிகரித்து, 891 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மூலக்கதை