சரிவடைந்த பங்குச் சந்தைகள்; சென்செக்ஸ் 560 புள்ளிகளை இழந்தது

தினமலர்  தினமலர்
சரிவடைந்த பங்குச் சந்தைகள்; சென்செக்ஸ் 560 புள்ளிகளை இழந்தது

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று, 560 புள்ளிகள் சரிந்தது. இந்த ஆண்டில் இது, இரண்டாவது பெரிய சரிவாகும் என்கின்றனர், சந்தை நிபுணர்கள்.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 560 புள்ளிகள் சரிந்தது. வாகனங்கள், வங்கிகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை, சரிவடைந்ததை அடுத்து, அதன் தாக்கம் சென்செக்ஸிலும் பிரதிபலித்தது. வாகனங்கள் மற்றும் வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, சென்செக்ஸ், 560.45 புள்ளிகள் சரிந்து, 38337.01 என்ற நிலையை அடைந்தது. இது, 1.44 சதவீத சரிவு. வர்த்தகத்தின் இடையே, குறைந்தபட்சமாக, 38271.35 புள்ளிகளை சந்தித்தது; அதிகபட்சமாக, 39058.73 என்ற நிலையை எட்டியது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 177.65 புள்ளிகள் சரிந்து, 11419.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, குறைந்தபட்ச அளவாக, 11399.30 புள்ளிகளையும், அதிகபட்ச அளவாக, 11640.35 புள்ளிகளையும் தொட்டது.நேற்றைய வர்த்தகத்தில், ‘மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ் இண்ட் பேங்க், யெஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, கோட்டக் பேங்க், எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்’ ஆகியவை, 4.36 சதவீதம் வரையிலான இழப்பைச் சந்தித்து, அதிக பாதிப்புக்கு ஆளாகின.

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், நேற்று வெளியாவதை முன்னிட்டு, இந்நிறுவனப் பங்குகள், 1.01 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.‘என்.டி.பி.சி., பவர்கிரிட், டி.சி.எஸ்., – ஓ.என்.ஜி.சி.,’ ஆகிய நிறுவனங்களின் பங்குகள், 2.32 சதவீதம் வரை உயர்வடைந்து, லாபத்தை சந்தித்தன.

வியாழன்று, சந்தை நேரத்திற்குப் பிறகு, பார்லிமென்டில், நிதி மசோதா மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தபோது, பெரும் செல்வந்தர்கள் மீதான வரி உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பாதிக்கும் என்ற வாதத்தை நிராகரித்தார். இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தங்களை ஒருங்கிணைத்து, நிறுவனமாக மாற்றிக் கொண்டால், வரி உயர்வு அவர்களை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இதன் தாக்கம், வெள்ளியன்று, சந்தையில் பிரதிபலித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், வியாழன்று, 1,404.86 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றனர், அதே நேரத்தில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், 329.05 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர். மேலும், பன்னாட்டு நிதியம், இந்தியாவின் நடப்பு கணக்கு இருப்பு பற்றாக்குறை, 2018 – 19ல், 68 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு, 49 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என, அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பும், சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

3.79 லட்சம் கோடி ரூபாய் இழப்பு:
வியாழன், வெள்ளி, என இரண்டு நாட்களாக, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததால், சந்தை முதலீட்டாளர்கள், 3.79 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

மூலக்கதை