பம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை

சபரிமலை : தொடர்ந்து பெய்யும் கன மழையால் சபரிமலை சன்னிதானத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் பம்பையை கடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட்டில் பெய்த பெருமழையால் பம்பை உருக்குலைந்தது. தற்போதுதான் இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கனமழை பயமுறுத்த தொடங்கியுள்ளது.'ரெட் அலர்ட்' சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. சபரிமலை அமைந்துள்ள பத்தணந்திட்டை மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


ஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 16ல் திறக்கப்பட்டது. அன்று மழை இல்லை. மறுநாள் மாலையில் லேசான சாரல் பெய்தது.ஜூலை 18 காலையில் மழை வலுத்தது. அன்று முதல் நேற்று இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் ஊழியர்களும், பக்தர்களும் சிரமப்படுகின்றனர்.

குளிக்க தடை


பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளையும் தாண்டி, பக்தர்கள் நடந்து செல்லும் மணல் பரப்பையும் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பம்பையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திருவேணி பாலம், ஆம்புலன்ஸ் ரோடு, கணபதி கோயில் பின்புறம் வழி சன்னிதானம் செல்கின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் குவிந்த மணல் முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போதைய கனமழையில் மணல் குவிந்து வருகிறது. பம்பை கணபதி கோயில் கீழ் படிக்கட்டு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பக்தர்கள் எச்சரிக்கையுடன் பம்பையை கடக்க வேண்டும் என தேவசம்போர்டு, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளை இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.மழை மேலும் வலுத்தால் பம்பை, சன்னிதானத்தில் பணியில் உள்ள ஊழியர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்படும்.

மூலக்கதை