கர்நாடகா சட்டப்பேரவையில் விடிய விடிய பாஜ போராட்டம்; மோடியுடன் அமித்ஷா அவசர ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகா சட்டப்பேரவையில் விடிய விடிய பாஜ போராட்டம்; மோடியுடன் அமித்ஷா அவசர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதேநேரத்தில், மதியம் 1. 30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கவர்னரின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதனால் ஆளும்கட்சி பெரும்பான்மை பலமிழந்தது. முதல்வர் பதவி விலகக்கோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் கடந்த 12ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படியும் சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்றுக்கொண்ட சபாநாயகர் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார்.

அதன்படி நேற்று காலை 11 மணிக்கு பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார். இடையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பத்து பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்வரை நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.



சித்தராமையா எழுப்பிய சட்டப் பிரச்னையால் பேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பகல் உணவு இடைவேளைக்கு பின் பேரவை கூடியதும் காகாவாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்தபாட்டீலை பாஜவினர் கடத்தி சென்றுள்ளதாக அமைச்சர் டி. கே. சிவகுமார் பிரச்னை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்கு வாதமும், மோதலும் ஏற்பட்டது. இதனால் அவையை துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டி ஒத்தி வைத்தார்.

பாஜ தர்ணா

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சியினர் தேவையில்லாத பிரச்னையை கிளப்பி நேரத்தை வீணாக்கி வருவதாக பாஜ குற்றம்சாட்டியது.

ஆளுநர் உடனடியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாக குற்றம்சாட்டியதுடன், உடனடியாக நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நேற்று மாலை 6. 30 மணி முதல் இன்று காலை வரை சட்டப்பேரவையில் விடிய விடிய உள்ளிருப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்களுடன் நள்ளிரவு 12. 15 மணி வரை எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.



காலையில் எம்எல்ஏக்கள் விதான்சவுதா கட்டிடத்தின் மேற்கு பகுதியில் யோகாசனம், நடைபயிற்சி, உடல் பயிற்சி செய்தனர். அதன்பின் விதானசவுதா அருகில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிக்கு சென்று குளித்து தயாராகியுள்ளனர்.

ஆளும் கூட்டணி அரசு நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக பாஜ சார்பில் ஆளுநர் வி. ஆர். வாலாவிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலனை செய்த ஆளுநர் இன்று பகல் 1. 30 மணிக்குள் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.



ஆனால் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களுக்கு இரு கட்சிகள் சார்பில் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்த பின் தான் நம்பிக்கைகோரும் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்தராமையா நேற்று வலியுறுத்தி இருந்தார். இதனால் சபைக்கூடியதும்  சித்தராமையா கோரிக்கை குறித்து அரசு வக்கீலுடன் தான் ஆலோசித்ததாகவும் இன்று பிற்பகல் மீண்டும் ஆலோசிக்க உள்ளதாகவும் அதன்பின் அது குறித்து தான் உத்தரவு வழங்குவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதத்தை தொடங் கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு?

சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில மஜத தலைவர் எச். கே. குமாரசாமி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சிறப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு மனு மீதான விசாரணையை இன்றே விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்?

இந்நிலையில் கொறடா உத்தரவு மீறியதாக காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில அரசு தலைமை வக்கீல் உதய்ஹொள்ளா உள்பட சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேரவையில் தேவையில்லாமல் ரகளை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் காங்கிரஸ் மற்றும் மஜத சட்டமன்ற கட்சி தலைவர்கள் கொடுத்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை சபாநாயகர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

தேவகவுடா-முதல்வர் ஆலோசனை

சட்டசபையில் இன்று எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து தேவகவுடாவுடன் அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில், கர்நாடகா விவகாரம் குறித்து, பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடியை, உள்துறை அமைச்சர் அமீத்ஷா இன்று காலையில் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது கர்நாடகா விவகாரம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இருவரும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை