உத்தரபிரதேசம் சோன்பத்ரா சென்ற பிரியங்கா காந்தி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் கைது

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேசம் சோன்பத்ரா சென்ற பிரியங்கா காந்தி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் கைது

சோன்பத்ரா: உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ராவில் சொத்து தகராறில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தோடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் சொத்து தொடர்பான பிரச்சனையால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 கோஷ்டிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் இன்று 24 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உயிரிழந்தோரின் குடும்பத்தை பார்க்க அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர். இதையடுத்து அவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சோன்பத்ரா சொத்து தகராறில் இறந்தவரக்ளின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், தன்னோடு 4 பேரை மட்டுமே அழைத்து செல்ல அனுமதி கேட்டதாக கூறினார். ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறினார். இந்த நிலையில், ஏன் அவர்களை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறிய பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்டோரை பார்க்க அனுமதிக்கும் வரை இங்கு அமைதியாக தர்ணா போராட்டம் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சோன்பத்ரா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை