லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி அதிரடி; பிசிசிஐ செயலாளரின் அதிகாரம் பறிப்பு : இந்திய அணி வீரர்கள் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி அதிரடி; பிசிசிஐ செயலாளரின் அதிகாரம் பறிப்பு : இந்திய அணி வீரர்கள் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மும்பை:  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூலை 19) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, தேர்வு குழு தலைவர் எம். எஸ். கே. பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் மும்பையில் இன்று சந்தித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



இருந்தாலும் அணியின் மூத்த வீரர் தோனி, கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் உலக கோப்பை போட்டியில் சரியாக விளையாடததால், அணிக்கு தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்றும், அதனால் திடீரென வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி இந்திய அணி நாளை மறுதினம் (ஜூலை 21) தேர்வு செய்யப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக விளையாட்டின் போது காயத்தில் சிக்கிய சில வீரர்களின் உடல்தகுதி அறிக்கை நாளை மாலை தான் கிடைக்கும் என்பதாலும், அத்துடன் வீரர்கள் தேர்வு விதிமுறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களும் அணித் தேர்வு ஒத்திவைப்புக்கு காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. வழக்கமாக அணித் தேர்வு கூட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முன்னின்று நடத்துவார்.


ஆனால், வரும் காலங்களில் அணித்தேர்வு விஷயமாக நடக்கும் கூட்டங்களை தேர்வு குழு தலைவர் தான் நடத்த வேண்டும்.

இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரோ, தலைமை செயல் அதிகாரியோ கலந்து கொள்ளக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அதிகார பறிப்பு நடவடிக்கை லோதா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலுக்கு கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை.

ஏதாவது வீரர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் செயலாளரிடம் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை