காவிரி பற்றி பேசிய பாஜ எம்பி.க்கு நெத்தியடி சண்டைய வெளியே போடுங்க இங்க, அதெல்லாம் வேணாம்!: மக்களவையில் சபாநாயகர் நகைச்சுவை

தினகரன்  தினகரன்
காவிரி பற்றி பேசிய பாஜ எம்பி.க்கு நெத்தியடி சண்டைய வெளியே போடுங்க இங்க, அதெல்லாம் வேணாம்!: மக்களவையில் சபாநாயகர் நகைச்சுவை

புதுடெல்லி: ‘‘காவிரி நீர் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே, வேண்டாம்’’ என கர்நாடக பாஜ எம்பி.யிடம் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது, அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய கர்நாடக பாஜ எம்பி சோபா கரந்த்லாஜே, ‘‘கர்நாடகாவின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், காவிரி நீர் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன்  பிரச்னை நிலவுகிறது,’’ என எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தமிழக, கேரளா எம்பி.க்களை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘இந்த சண்டையை வெளியே போடுங்க... இங்க, அதெல்லாம் வேணாம்...’’ என்று நகைச்சுவையாக கூறினார். இதை கேட்டு அவை உறுப்பினர்கள் சிரித்தனர். அப்போது, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ‘‘மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பங்கீடு பிரச்னைகள் நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் உள்ளன. இப்பிரச்னைகளை தீர்க்க மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு தேவை. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் பைப் மூலம் குடிநீர் விநியாகம் உறுதி செய்யப்படும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு பிரசாரத்தை, அரசின் அனைத்து துறைகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து ஜல்சக்தி துறை மேற்கொள்ளும்,’’ என்றார். 

மூலக்கதை