மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; 2020, பிப்., 11க்கு ஒத்திவைப்பு

தினமலர்  தினமலர்
மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; 2020, பிப்., 11க்கு ஒத்திவைப்பு

லண்டன்: தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, 2020, பிப்ரவரி 11க்கு, பிரிட்டன் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, 'கிங்பிஷர்' என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார். இந்திய வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியா அழைத்து வரும் முயற்சியில், அமலாக்க துறை ஈடுபட்டுள்ளது. அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த, அந்நாட்டின் கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவை உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, அவர் மேல் முறையீடு செய்தார்.

இப்போது, இவ்வழக்கு, பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விஜய் மல்லையா, கடன் தொகையை திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதை பெற்றுக் கொள்ளாமல், அவரை நாடு கடத்துவதில், இந்திய அரசு மும்முரமாக இருப்பதாகவும், மல்லையா தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று(ஜூலை 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2020, பிப்ரவரி 11 முதல், மூன்று நாட்களுக்கு, இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அரசு உறுதியாக உள்ளது!


இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கு விசாரணையின் தேதிகளை, நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் மல்லையாவை, இந்தியா கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரமாக செய்யும். இதில், மிகவும் உறுதியாக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை