திருவள்ளூர் அருகே கொலையில் திருப்பம்:‘சிக்கன் பக்கோடா கேட்டதால் சிறுமியை அடித்து கொன்றேன்....கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே கொலையில் திருப்பம்:‘சிக்கன் பக்கோடா கேட்டதால் சிறுமியை அடித்து கொன்றேன்....கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஹாலோபிளாக் தொழிற்சாலையில், 4 வயது ஒடிஷா சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். விசாரணையில், ‘சிக்கன் பக்கோடா’ கேட்டதால் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் வாலிபர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அமீர் (45). இவர் தனது மனைவி மற்றும் மகள் இஷானி (4) ஆகியோருடன், திருவள்ளூர் அடுத்த நேமம் ஆண்டர்சன்பேட்டை அருகே உள்ள ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் சேம்பர் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 14ம் தேதி மாலையில் இஷானியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர், இஷானியை இரவு முழுவதும் தேடினர்.

மறுநாள் காலை 8 மணியளவில் சேம்பரின் பின்புறம் முகம் முழுவதும் பலத்த காயத்துடன் இஷானி பிணமாக கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து, அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நிலக்கர் (22) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சிறுமியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் நிலக்கர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்: இஷானியை வழக்கம்போல கடந்த 14ம் தேதி மாலை வெள்ளவேடுக்கு அழைத்து சென்றேன். அங்கு ஒரு டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்தேன்.

பின்னர், சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு சிறுமியை சேம்பருக்கு அழைத்து வந்தேன். வழியில், சிறிய பாலத்தின் சுவரில் சிறுமியை உட்கார வைத்துவிட்டு, சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன்.

அப்போது, ‘எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு’ என்று கேட்டாள்.

மறுத்ததால், என் கையை சிறுமி கடித்தாள்.

இதில் ஆத்திரமடைந்து சிறுமியின் கன்னனத்தில் அடித்தேன். எதிர்பாராதவிதமாக சிறிய பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்தாள்.

முகம் முழுவதும் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இறந்து விட்டாள்.

பயத்தில், உடலை தூக்கிவந்து சேம்பர் பின்புறம் உள்ள புதரில் வீசினேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நிலக்கரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை