அயோத்தி விவகாரம்: சமரச குழு இடைக்கால அறிக்கை தாக்கல்... ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை..!

தினகரன்  தினகரன்
அயோத்தி விவகாரம்: சமரச குழு இடைக்கால அறிக்கை தாக்கல்... ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை..!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரச முழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னை குறித்து பைசாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய இக்குழு, கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், “அயோத்தி நில பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டு பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்கிறோம்’’ என குறிப்பிட்டிருந்தனர். இதனை அடிப்படையாக கொண்டு அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இரு தரப்பிலும் இருக்கும் பிரச்னையை பேசி தீர்க்க சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் இந்து அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சிங் விஷாரத் கடந்த 9ம் தேதி புதிய கோரிக்கையை முன்வைத்தார்.அதில், “பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தற்போதுவரை தெரியவில்லை. சமரச பேச்சு வாரத்தைக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீதிமன்றம் கூடுதலாக கால அவகாசம் வழங்கியுள்ளதை ஏற்க முடியாது. அதனால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதியளித்தது. இந்த நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த 11- ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அமைப்புகள் தரப்பு வாதத்தில், “சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர அமைக்கப்பட்ட குழு சரியாக செயல்படவில்லை. எனவே வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து சமரச குழு தரப்பு வாதத்தில், “அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் சமரச குழு மிக சரியான கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து முதல் இடைக்கால அறிக்கையும் நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பிரச்னையை தீர்க்கத் தான் நாங்கள் சமரச குழுவை நியமித்தோம். அவர்கள் அதனை முடிக்கும் வரை காத்து இருந்திருக்கலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், ‘‘அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் இன்றைய தேதிக்குள் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 பேர் கொண்ட சமரச குழு அறிக்கையை தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், வழக்கு விசாரணையை ஆக.2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், ஜூலை 31ம் தேதி வரை சமரச குழு பணியை தொடரவும், முடிவுகளை ஆக., 1ம் தேதி தெரிவிக்கும்படியும் கூறினார். மேலும் அயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

மூலக்கதை