ஒன்றரை ஆண்டுகால கூட்டணி ஆட்சி தப்புமா? குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு...கர்நாடக சட்டசபையில் காரசார விவாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒன்றரை ஆண்டுகால கூட்டணி ஆட்சி தப்புமா? குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு...கர்நாடக சட்டசபையில் காரசார விவாதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தாக்கல் செய்தது. அந்த வாக்கெடுப்பின் மீது முதல்வர் குமாரசாமி விவாதத்தை தொடங்கி வைத்து பாஜ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

விவாதம் முடிந்த பிறகுதான் ஓட்டெடுப்பு நடைபெறும். இதனால் கடைசி கட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

மாநிலத்தில் மஜதகாங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 1ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 6ம் தேதி 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது, இதில் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டியும் கொடுத்தார்.

9ம் தேதி ரோஷன்பெய்க்கும் ராஜினாமா கடிதம் கொடுத்தார். கடந்த 10ம் தேதி எம்டிபி நாகராஜ், டாக்டர் கே. சுதாகர் ஆகியோர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

ஆளும் கட்சியில் உள்ள 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால் பேரவையில் ஆளும் கட்சியின் பலம் 101 ஆகவும், எதிர்க்கட்சியின் பலம் 107 ஆகவும் உயர்ந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:

ஆளும் கூட்டணியில் உள்ள 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதால், பேரவையில் கூட்டணியின் பெரும்பான்மை குறைந்துள்ளது. இதனால் முதல்வர் பதவி விலககோரி பாஜ வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது.

சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை முன் வைத்து பாஜ போராட்டம் நடத்தும் என்பதை உணர்ந்த முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவருவதாகவும் அதற்கு அனுமதி, தேதி வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்று ஜூலை 18ம் தேதி (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கினார்.

அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

மாநில சட்டபேரவையில் தற்போது பாஜவுக்கு 2 சுயேட்சைகள் உள்பட 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு 101 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.

பிடிஎம் லே அவுட் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வாரா இல்லையா? என்பது தெரியவில்லை.

அவர் கலந்துகொண்டு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தால் ஆளும் கூட்டணியின் பலம் 102 ஆக மட்டுமே உயரும். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ நாகேந்திரா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் வாக்கெடுப்பில் பங்கேற்பாரா? என்பது தெரியவில்லை.

பிரக்குருதி ரிசார்ட்டில் தங்கியிருந்த மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ சீமாந்தபாட்டீல் அங்கிருந்து வெளியில் சென்றுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் இருவர் அவைக்கு வரவில்லை எனில் ஆளும் கூட்டணி யின் பலம் இன்னும் குறையும்.

தற்போதைய சூழ்நிலையில் பேரவையில் ஆளும் கூட்டணிக்கு பலம் குறைவாகவுள்ளது. எதிர்கட்சியில் உள்ளவர்கள் யாராவது கட்சி மாறி ஆளும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி ஆட்சி வெற்றிபெறும்.

விதானசவுதாவை நோக்கி எம்எல்ஏக்கள்

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக மூன்று கட்சி எம்எல்ஏக்களும் பெங்களூரு புறநகரில் ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளனர்.

பிரக்குருதி ரிசார்ட்டில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் துணைமுதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தலைமையில் இரண்டு பஸ்களில் விதானசவுதா புறப்பட்டனர். அதேபோல் ரமடா ரிசார்ட்டில் இருந்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜ எம்எல்ஏக்களும், பிரிஸ்டேஜ் ரிசார்ட்டில் இருந்து கூட்டுறவு துறை அமைச்சர் பண்டேப்பா காஷம்பூர் தலைமையில் மஜத எம்எல்ஏக்கள் விதானசவுதாவுக்கு புறப்பட்டனர்.

அவர்கள் காலை 10. 45 மணிக்கு விதானசவுதா வந்து சேர்ந்தனர்.

முதல்வர் குமாரசாமி கூல்

சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், பாஜவில் பெரியளவில் பரபரப்பு காணப்படும் நிலையில், முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக உள்ளனர். பெங்களூரு ஜே. பி. நகரில் உள்ள வீட்டில் முதல்வர் குமாரசாமி வழக்கம்போல் காலை எழுந்து யோகாசனம், உடல் பயிற்சி செய்தபின், நாளிதழ்கள் வாசித்தார்.

மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி நீலமணி என். ராஜு முதல்வரை வீட்டில் சந்தித்து மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு வீட்டில் இருந்து விதானசவுதாவுக்கு முதல்வர் வந்தார்.

நீண்ட விவாதம் நடத்த முடிவு

சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதை தொடர்ந்து தீர்மானத்தின் மீது நீண்ட விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். மூன்று கட்சி சார்பில் குறைந்த பட்சம் 25 பேரையாவது தீர்மானத்தின் மீது தாங்கள் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுகொண்டார். விவாதத்தை முதல்வர் குமாரசாமி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, பாஜ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும் பேசினர்.

இதனால் இன்று நாள் முழுவதும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. தீர்மானத்தின் மீதான விவாதத்தை வரும் திங்கட்கிழமை வரை இழுத்து செல்லும் நோக்கமும் ஆளும் கட்சி தரப்பில் உள்ளதாக தெரியவருகிறது.

விவாதம் இழுத்துக் கொண்டு செல்வதால் பெங்களூரில் கடைசிக் கட்ட பரபரப்பு நிலவுகிறது.

.

மூலக்கதை