செவ்வாய் கிரக 'நாசா' விண்கலத்தில் 'பெயர்'

தினமலர்  தினமலர்
செவ்வாய் கிரக நாசா விண்கலத்தில் பெயர்

திருப்பூர் : செவ்வாய் கிரகத்துக்கு, 'நாசா' அனுப்பும் விண்கலத்தில், பொதுமக்கள், தங்கள் பெயர்களைப் பொறிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, உலகம் முழுவதும், 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா', செவ்வாய் கிரகத்துக்கு, 'மார்ஸ் 2020 ரோவர்' விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2021 பிப்ரவரியில், இது, செவ்வாயில் தரையிறங்கும். 1,000 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான தடயங்கள், தட்பவெப்பம் உள்ளிட்ட மாதிரிகளைச் சேகரிக்கும்.


இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது. மத்திய விஞ்ஞான் பிரசார் கழகத்துடன் இணைக்கப்பட்ட, கலிலியோ அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது: செப்., 30 வரை, பொதுமக்கள், தங்கள் பெயர்களை, விண்கலத்தில் பொறித்துக் கொள்வதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது. https://go.nasa.gov/Mars2020Pass என்ற இணையதளம் மூலம், பெயர்களைப் பதிந்து, தங்கள் பெயருடன் கூடிய அடையாள பயணச்சீட்டை பெற முடியும். இன்று(நேற்று) மாலை 4.30 மணி நிலவரப்படி, 76 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்களைப் பதிவிட்டுள்ளனர்.

விரைவில், இது ஒரு கோடி எண்ணிக்கையை தாண்டிவிடும். கலிபோர்னியா பாஸ்டோனாவில் உள்ள, 'நாசா'வின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக்கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகம், எலக்ட்ரான் கதிர்வீச்சை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட பெயர்களை, சிலிக்கான் சிப்பில் பொறிக்கும்.

இதில் பொறிக்கப்படவிருக்கும் எழுத்துகளின் அளவு, மனிதத் தலைமுடியின் அகலத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கைவிட சிறிதாகும். 10 லட்சம் பெயர்களுக்கு மேலாக, ஒரு சிப்பில் பொறிக்க முடியும். இந்த சிப்கள் கண்ணாடியால் மூடப்பட்டு, ரோவரில் பயணிக்கும். எதிர்காலத்தில், கிரகங்களுக்கு, மனிதர்கள் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை, பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், இந்தப் பெயர் பொறிக்கும் திட்டத்தை, 'நாசா' கையாண்டு வருகிறது. இவ்வாறு, கண்ணபிரான் கூறினார்.


மூலக்கதை