உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடினமான பிரிவில் இந்தியா

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடினமான பிரிவில் இந்தியா

கோலாலம்பூர்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றில், இந்திய அணி கடினமான இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அடுத்த பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான ஆசிய தகுதிச் சுற்று (2வது ரவுண்டு) செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன.இந்த பிரிவுகளில் இடம் பெறும் 5 அணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி... பலம் வாய்ந்த கத்தார், ஒமான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் சவாலை சந்திக்கிறது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சீனாவில் நடைபெற உள்ள இறுதி தகுதிச் சுற்றில் பங்கேற்கலாம். மேலும், 2023ம் ஆண்டுக்கான ஏப்சி ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்று குறித்து இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில், ‘இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் அனைத்துமே பலம் வாய்ந்தவை தான். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றார்.

மூலக்கதை