சந்திர கிரகணம் சபரிமலை கோயில் நடைதிறப்பு தாமதம்: ஆடி பிறந்ததால் பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சந்திர கிரகணம் சபரிமலை கோயில் நடைதிறப்பு தாமதம்: ஆடி பிறந்ததால் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சந்திர கிரகணத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அரை மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஆடி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.

இன்று முதல் ஆடி மாத சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன. வழக்கமாக மாத பூஜைகளின்போது தினமும் காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

இன்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், சபரிமலை ஐயப்பன் கோயில் அரை மணி நேரம் கால தாமதமாக காலை 5. 30 மணிக்கு திறக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் கடந்தாண்டு கனமழை பெய்யாததால் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பம்பையில் இருந்து சுமார் 23 கி. மீ.

தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பக்தர்கள் ேகரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பம்பையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், பக்தர்களின் வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்தன.

இதையடுத்து மாத பூஜைகளின்போது மட்டும் பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.   இதையடுத்து நேற்று முதல் வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்பட்டன. இன்று ஆடி 1ம் தேதி என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகம் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் நடை திறப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்றிரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. நள்ளிரவு 1. 33 மணி முதல் அதிகாலை 4. 32 வரை சந்திரகிரகணம் ஏற்படுவதை தொடர்ந்து நேற்று இரவில் வழக்கத்தைவிட ஒருமணி நேரம் முன்னதாக கோயில் நடை அடைக்கப்பட்டன.

நள்ளிரவு 1. 33 மணிக்கு கோயிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி சுவாமி புறப்பாடானது. அதிகாலை 3. 02 மணிக்கு தீர்த்தக் கடலில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.

இன்று அதிகாலை 4. 30 மணிக்கு மேல் கிரகணம் முற்றிலும் விலகிய பின்னர் காலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு கிரகணாபிஷேகம் நடந்தது.

.

மூலக்கதை