குஜராத்தின் சில கிராமங்களில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை..மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்!

தினகரன்  தினகரன்
குஜராத்தின் சில கிராமங்களில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை..மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற புது சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பன்ஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த தக்கோர் சமூக மக்கள், சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். அதில், தங்கள் இன மக்கள் வாழும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். வீணான பிரச்சினைகள் உருவாவதை தடுப்பதற்காக இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருப்பதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சமூகத்தில் செல்போன் பயன்பாடுக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் வேறு சாதியில் பிள்ளைகள் திருமணம் செய்தால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெண்கள்  செல்போன் பயன்படுத்தினாலோ, சாதி மாறி திருமணம் செய்தாலோ சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடியாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். இதுதவிர, திருமண விழாக்களில் டிஜே வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, நீண்ட ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என்றும் பல உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்ட விதிமுறைக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கனிபென் தகோர் ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு செல்போன் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும், தொழில்நுட்பத்திலிருந்து பெண்கள் விலகி, படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதே சமயம், செல்போன் பயன்பாட்டுக்கான தடை என்பது ஆண், பெண் என்ற வேறுபாடு இன்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மற்றொரு எம்.எல்.ஏ அல்பேஷ் தக்கோர் கூறியுள்ளார். மேலும், பட்டாசு, டிஜே உள்ளிட்ட செலவுகள் திருமண விழாக்களில் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறுவது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை