வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம்: நிதித்துறை இணையமைச்சர்

தினகரன்  தினகரன்
வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம்: நிதித்துறை இணையமைச்சர்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம் என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி, வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை என பல்வேறு வங்கி மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், பிராந்திய கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. மாநிலத்துக்குள் இருக்கும் கிராமப்புற வங்கிகளை இணைப்பதன் மூலம் செலவைக் குறைத்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்த வழி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, 2018-ஆம் ஆண்டு மார்ச் வரை போலி ரசீது தாக்கல் செய்து வரிக்கழிவு கோரியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018-19 நிதியாண்டில் போலி ரசீது மூலம் ரூ.11,251 கோடி அளவுக்கு வரிக்கழிவு கோரியது தொடர்பாக 1,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 154 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ரசீது தாக்கல் செய்வது, வரி மோசடியில் ஈடுபடுவது, வரி ஏய்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றைத் தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியத்தில் இதற்கெனத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அனுராக் தாகூர் தெரிவித்தார். இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம் என எழுத்துப்பூர்வ பதிலில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக வேலைக்கு செல்லும் பெண்களுக்காக்ன பிரசவ விடுமுறை 26 வாரங்களாக உயர்த்தப்பட்டு இடைக்கால மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை