சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உறுதி

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உறுதி

மும்பை: கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என்று மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேர் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று இந்த கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை காட்டி ஏராளமான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனால், கடந்த இரண்டு வாரங்களில், 15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமாவை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. அதேசமயம், கர்நாடக சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டது. இந்த தீர்ப்பை அதிருப்தி எம்எல்ஏக்கள் வரவேற்றுள்ளனர். அத்துடன், ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு வீடியோ அனுப்பி உள்ளனர். அந்த வீடியோவில் பேசிய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பி.சி.பாட்டீல், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த முடிவெடுத்தாலும் சேர்ந்தே எடுப்போம். என்ன நடந்தாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்திற்கு போகும் பேச்சுக்கே இடமில்லை, என்று கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டுவரவுள்ளார். தற்போதைய நிலையில், 224 பேர் கொண்ட கர்நாடக பேரவையில், ஆளும் கூட்டணியின் பலம் 117 ஆகவும், பாஜக மற்றும் அதன் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களின் பலம் 107 ஆகவும் உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பங்கேற்காத சூழலில் அதன் பலம் 102 ஆக குறைந்துவிடும். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

மூலக்கதை