பாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது

தினமலர்  தினமலர்
பாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது

லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து ஹபீஸ் சயீது தலைவராக உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா, பலாஹே இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து பாக். அரசு கண்காணித்து வருகிறது. ஜமாத் உத் தாவா அமைப்பின் சார்பில் பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட மதப்பள்ளிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்படுகின்றன.



முன்ஜாமின்


இந்த மதப்பள்ளிக்காக தரப்பட்ட நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக ஹபீஸ் சயீது மற்றும் அவருக்கு நெருக்கமான மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு ஆகஸ்ட் 31 வரை முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. பயங்கரவாதத்துக்கு பண உதவி மற்றும் பண மோசடி வழக்குகளை எதிர்த்து ஹபீஸ் சயீது சார்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

நீதிமன்ற காவல்


இந்நிலையில், லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்த பயங்கரவாதி ஹபஸ் சயீது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதற்காக கைது செய்யப்பட்டார் என தகவல் இல்லை. கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூலக்கதை